டெல்லி: இந்திய திருநாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் ஆகியவற்றிற்காக நம்மாலானா அனைத்தையும் அளிக்க வேண்டும் என குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் 75வது சுதந்திர தின வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டார். ஜனநாயகத்தின் மெய்யான சக்தியை உலகம் தெரிந்து கொள்ள இந்தியா உதவி இருக்கிறது என்று கூறிய குடியரசுத் தலைவர் இந்திய விடுதலைக்கு போராடிய அனைவருக்கும் தலைவணங்குவதாக குறிப்பிட்டார். சுதந்திரத்திற்காக போரிட்ட பழங்குடி நாயகர்கள் ஒட்டு மொத்த நாட்டிற்கும் உத்வேகம் அளிப்பவர்கள் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். 2047ஆம் ஆண்டில் நம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள் நனவாகியிருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டதில் வியத்தகு சாதனையை இந்தியா படைத்திட உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த குடியரசுத் தலைவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நம்பிக்கை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் பெண்கள் பல தடைகளை உடைத்து முன்னேறி வருவதாக குறிப்பிட்ட திரெளபதி முர்மு, நாட்டின் மிகபெரிய நம்பிக்கையே அவர்கள் தான் என்றார். நமக்கு அனைத்தையும் தந்திருக்கும் நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்திற்காகவும் நம்மாலான அனைத்தையும் தந்து சிறப்பான இந்தியாவை உருவாக்க உறுதியேற்கவேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.