இந்தியாவில் இதுவரை 4ஜி தொழில்நுட்பம் மட்டுமே இருந்த நிலையில் தற்போது அடுத்த தலைமுறைக்கான 5ஜி தொழில்நுட்பம் விரைவில் வர உள்ளது.
5ஜி தொழில்நுட்பத்திற்கான ஏலம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் விரைவில் இந்த தொழில்நுட்பம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் இன்று முதல் 5ஜி சேவையை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம்… ஆயிரக்கணக்கில் குவியும் வேலைவாய்ப்புகள்!

5ஜி ஏலம்
இந்தியாவில் கடந்த மாதம் 5ஜி ஏலம் முடிவடைந்தது என்பதும் இதனையடுத்து அதிகாரபூர்வமாக 5ஜி சேவை தொடங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ – ஏர்டெல்
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அதிக அளவு ஏலத்தை எடுத்து உள்ளது என்பதும் அதனை அடுத்து பாரதி ஏர்டெல் நிறுவனம் 5ஜி ஏலத்தை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 5ஜி தொழில்நுட்பதை ஜியோ அல்லத் ஏர்டெல் அல்லது இரண்டு நிறுவனங்களும் இன்று முதல் தங்கள் சேவையை தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜியோவின் 5ஜி சேவை
இந்த மாத தொடக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி, ‘ இந்தியா முழுவதும் 5ஜி தொழில்நுட்பத்துடன் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம் என்று கூறினார். எனவே ஆகஸ்ட் 15 முதல் ஜியோ நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்றும் 4ஜி நெட்வொர்க்கை போலவே 5ஜி சேவைகளையும் இந்தியாவில் குறைந்த விலையில் இந்நிறுவனம் வழங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ரூ.88,000 கோடி
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஜியோ மட்டுமே அதிக அளவு ஏலம் எடுத்துள்ளது என்றும் சுமார் 88 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மதிப்புள்ள அனைத்து அலைக்கற்றைகளிலும் கிட்டத்தட்ட பாதியை ஜியோ நிறுவனம் வாங்கியுள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது. பிரீமியம் 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்டில் ஸ்பெக்ட்ரத்தையும் ஜியோ பெற்றுள்ளது. இந்த கட்டத்தில், 700MHzக்கான ஆதரவு உலகளவில் பல சாதனங்களில் பயன்படுத்தப்படுவதால், உயர்நிலை 1GHz அல்லது மலிவு விலை 600MHz பட்டைகளை விட இது மிகவும் மதிப்பு வாய்ந்தது.

ஏர்டெல்
அதேபோல் பார்தி ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் புதிய தொழில் நுட்பத்தை ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளோம் என்று கூறியிருந்தது. எனவே இந்த நிறுவனமும் இன்று முதல் தனது 5ஜி சேவையை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வோடோபோன்
இதற்கிடையே வோடோபோன்நிறுவனம் 18,799 ரூபாய்க்கு ஸ்பெக்ட்ரம் உரிமையை பெற்றுள்ள நிலையில் இந்த நிறுவனம் விரைவில் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதானி நிறுவனம்
மேலும் ஏலத்தில் பங்கேற்ற 4 நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி டேட்டா நிறுவனம் 212 கோடி ரூபாய்க்கு அலைக்கற்றை ஏலத்தை எடுத்துள்ளது. இந்நிறுவனம் தங்களது பணிகளை மேற்கொள்வதற்காக 5ஜி சேவையை ஏலம் எடுத்துள்ளதாகவும் வாடிக்கையாளர்களுக்கு வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் ஏற்கனவே கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி
இன்று காலை செங்கோட்டையில் சுதந்திர தின உரையின்போது பிரதமர் மோடி 5ஜி சேவைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து பேசினார். இதனை அடுத்து எப்போது வேண்டுமானாலும் 5ஜி சேவை தொடங்கும் அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Independence Day 2022: Will 5G launch in India today?
Independence Day 2022: Will 5G launch in India today? | 76வது சுதந்திர தினம்… இன்று முதல் தொடங்குகிறதா 5ஜி சேவை?