76வது சுதந்திர தின விழாவை ஒட்டி, இந்தியாவுக்கு, உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இந்தியத் திருநாட்டின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றி, வணக்கம் செலுத்தி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதே போல், மாநில தலைநகரங்களில், மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், 76வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்தியாவுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஏறக்குறைய 40 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள், ஆகஸ்ட் 15 ஆம் தேதி 76வது ஆண்டு விடுதலை கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். காந்தியின் உண்மை மற்றும் அகிம்சை ஆகியவற்றின் உறுதியான செய்தியை வழிகாட்டியாக கொண்ட ஜனநாயக பயணத்தில் இந்திய மக்களுடன் அமெரிக்காவும் இணைகிறது. இந்திய – அமெரிக்க சமூகத்தினர், அமெரிக்காவை அதிக புதுமையான, எல்லாவற்றையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான ஒரு நாடாக உருவாக்கி உள்ளனர்.இந்த ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 76வது ஆண்டு தூதரக உறவு கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகிறது” என தெரிவித்து உள்ளார்.
மோடி ஜெபித்துள்ள அதே ஊழல் மந்திரம்… இனியும் கிடைக்குமா மக்களின் வரம்?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்பான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள். சுதந்திரமான வளர்ச்சியின் பல ஆண்டுகளில், உங்கள் நாடு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வெற்றியை பொருளாதார, சமூக, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் பிற துறைகளில் அடைந்துள்ளது. உலக அரங்கில் இந்தியா கணிசமான மதிப்பைப் பெறுகிறது. சர்வதேச நிகழ்ச்சி நிரலில் உள்ள அழுத்தமான பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்தியா முக்கிய ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்கிறது. மாஸ்கோவும், புதுடெல்லியும் பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக ஒத்துழைக்கின்றன. இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பிராந்திய மற்றும் உலக அளவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும் கூட்டு முயற்சிகளின் மூலம், வளர்ச்சியை உறுதி செய்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். சமீபத்தில் குஜராத் மற்றும் புதுடெல்லிக்கு நான் வந்திருந்த போது, நம் நாடுகளுக்கு இடையே செழித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கைப் பாலத்தை நேரில் பார்த்தேன். இந்த பிணைப்புகள் இரு நாட்டு உறவுகள் அடுத்த 75 ஆண்டுகளில் மேலும் வலுப்பெற வேண்டும்” என தெரிவித்து உள்ளார்.