பழைய ஓய்வூதிய திட்டம்:
திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று 2021 சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவே்ற்றப்படாததால் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
மாதத்துக்கு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களும் இருக்கின்றனர்; அவர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன என்று பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேசும்போது நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்த கருத்தும் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல ஆகிவிட்டது.
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பலமுறை முறையிட்டும் அரசு ஒரு முடிவுக்கு வராததால், ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களது பல்வேறு சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான ஜாக்டோ-ஜியோ மூலம் பென்சன் மீட்பு மாநாடு என்ற பேரில் பிரமாண்டமான போராட்டத்தில் இறங்கவும் முடிவு செய்திருந்தனர்.
சமாதானம்:
போராட்டம் எல்லாம் வேண்டாம்… எதுவா இருந்தாலும் பார்த்துக் கொள்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் சமாதானப்படுத்தியதையடுத்து, தங்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக ஜாக்டோ-ஜியோ அண்மையில் அறிவித்திருந்தது. அரசு ஊழியர்களுக்கும், அரசுக்கும் இடையேயான பிரச்னை கொஞ்சம் ஓய்ந்து என்று எண்ணியிருந்த முதல்வர் ஸ்டாலினின் தூக்கத்தை கலைக்கும் விதத்தில் தற்போது ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இனிப்பு செய்தி:
சுதந்திர தினத்தன்று இனிப்பான செய்தியாக இருக்கட்டுமே என்று அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை முதல்வர் அறிவிக்க, DA உயர்வு என்பது வழக்கமான அறிவிப்புதானே? அதனை ஏன் சுதந்திர தினத்தன்று அறிவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு என்பதும் நுட்பமான ஏமாற்று வேலை என்றும் தமிழக அரசுகள் சாடியுள்ளனர்.
கசப்பானது:
‘அகவிலைப்படி அறிவிப்பானது வழக்கமான நடைமுறைதானே… இதனை ஏன் சுதந்திரநாள் உரையின்போது முதல்வர் அறிவிக்க வேண்டும்? ஏனென்றால் அந்த உரையினை அனைத்துப் பொதுமக்களும் கவனிப்பார்கள்; அதன் மூலமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான பொதுமக்களின் வெறுப்பை அதிகரிக்கச் செய்வதுதானே நோக்கமாக இருக்கவேண்டுமேயன்றி வேறென்ன இருக்க முடியும்?
இதுல இன்னும் நுட்பமாக பார்க்க வேண்டிய விஷயம்… மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு என்பது தான்… மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி உயர்வு என்பது 01.01.2022 முதல் வழங்கப்படுகிறது… ஆனால் மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த 34% அகவிலைப்படி உயர்வு 01.07.2022 முதலே வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மத்திய அரசு ஊழியர்களை விட அகவிலைப்படியில் ஆறு மாதம் பின்தங்கிய உயர்வு …. இது எப்படி இணையான அகவிலைப்படி உயர்வாக இருக்க முடியும்? இதற்கு பெயர்தான் நூதனமான உருட்டு என்பது..!’ என்று இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த விமர்சனத்தை, அரசு ஊழியர்கள் பலர் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.