சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே 2 வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி கிருஷணன் ராமசாமியிடம் மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்ற பதிவுத் துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. தலைமை நீதிபதியிடமும் முறையிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி,அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11-ம் தேதிகளில் விசாரித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நாளை (ஆக.17) தீர்ப்பு அளிக்கப்படவுள்ளதாக, உயர் நீதிமன்ற பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் நாளைய வழக்கு விசாரணைப் பட்டியல் வெளியான பின்னரே, இந்த தகவல் உறுதியாகும் என்றும் கூறப்படுகிறது.