சென்னை: அரசியல் கட்சி அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கட்சித் தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசியக் கொடியை ஏற்றினார்.பொருளாளர் டி.ஆர்.பாலு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், காஷ்மீரில் சுய உதவி குழு பெண்களால் தயார் செய்யப்பட்ட தேசியக் கொடியை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஏற்றினார். பாஜக தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர் குஷ்பு, தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார். முன்னாள் மாநிலத் தலைவர்கள் குமரிஅனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி மற்றும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேசியக் கொடியை ஏற்றினார். மாநிலச் செயலாளர் இரா.முத்தரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். கட்சியின் செங்கொடியை அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஏற்றி வைத்தார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், நூற்றாண்டு கண்டநாயகருமான என்.சங்கரய்யா குரோம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். சங்கரய்யாவின் (உரை, பேட்டி, கட்டுரை, ஆவணம்) நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் வெளியிட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பல்லாவரம் பகுதி பொருளாளர் அபிநயா பெற்றுக்கொண்டார்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் 118 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை அசோகா ரோட்டில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தலைமையில் துணைத் தலைவர் மாறன் (எ) வேணுகோபால் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஶ்ரீப்ரியா குழந்தைகள் 75 பேருடன் மூவர்ணகொடியை ஏற்றினார். மாநிலச் செயலாளர்கள் நாகராஜன், செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, அர்ஜுனர், முரளி அப்பாஸ், தட்ஷிணா மூர்த்தி, சு.ஆ. பொன்னுசாமி கலந்து கொண்டனர்.
சென்னை தி.நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில பொருளாளர் ஏ.எம்.சுந்தரேசன் தேசியக் கொடியேற்றினார்.
சென்னை மண்ணடியில் உள்ளஎஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமதுநவவி தேசியக் கொடியை ஏற்றினார்.
அதேபகுதியில் உள்ள தமுமுக-மமக தலைமையகத்தில் மமக துணை பொதுச் செயலாளர் எம்.யாகூப் தேசியக் கொடியை ஏற்றினார். தலைமை பிரதிநிதி வெங்கலம் ஜபருல்லா, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் கே.அப்துல் சலாம் கலந்து கொண்டனர்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்இந்தியாவின் மாநில தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி தேசிய கொடியை ஏற்றினார்.
சென்னை அசோக்நகரில் உள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைவர் என்.ஆர்.தனபாலன் தேசியக் கொடியை ஏற்றினார்.