"அரசுக் கல்லூரியில் படித்து முதல் முயற்சியிலேயே ஐபிஎஸ் ஆனேன்!"- மாணவர்களை ஊக்கப்படுத்திய எஸ்.பி நிஷா

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது முதலைமேடுதிட்டு கிராமம். இந்த கிராமத்தைப் பெருவெள்ளம் சூழ்ந்து தற்போது நீர் வடிந்து வருகிறது. இதனால் இங்கு இயங்கிவந்த அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கடந்த 10 நாள்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

மயிலாடுதுறை எஸ்.பி

இந்த நிலையில், இன்று (16.08.2022) பள்ளி மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி நிஷா முதலைமேடுதிட்டு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நேரில் வந்து,  மாணவர்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.500 மதிப்புள்ள புத்தகம் மற்றும் எழுதுபொருள்கள் அடங்கிய ஸ்கூல்பேக் வழங்கினார். தொடர்ந்து மாணவருக்கு எஸ்.பி நிஷா வினாடி, வினா நடத்தி அதில் முதல் இரண்டு இடங்களில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு செஸ்போர்டு பரிசாக வழங்கினார்

அதைத் தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய எஸ்.பி நிஷா, “50 வருடங்களுக்கு முன்பு பெண்கள் கலெக்டராக, எஸ்.பி-யாக இருக்க முடியுமா என்று நம்மால் யோசித்துக்கூட பார்த்திருக்க முடியாது. ஆனால், இன்று எல்லா இடங்களிலும் பெண் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். நம் மாவட்டத்தில் கலெக்டர்,  எஸ்.பி, ஆர்.டி.ஓ என எல்லோரும் பெண்களாக இருக்கிறோம். மாணவர்கள் எல்லோரும் சொந்தமாக முயற்சி செய்ய வேண்டும். யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது. `நான் வெற்றி பெறுவேன்’ என்ற முடிவெடுக்க வேண்டும்.

மயிலாடுதுறை எஸ்.பி

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.சி.எஸ் போன்ற தேர்வுகள் எழுதி வெற்றிபெற, ஐந்து… ஆறு முறை எழுத வேண்டிய அவசியம் இல்லை. முயற்சி செய்தால் முதல் முறையிலேயே வெற்றிபெற முடியும். நான் அரசுக் கல்லூரியில் படித்தேன், முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றேன். தனியார் பள்ளியில் படித்தாலும், அரசுப் பள்ளியில் படித்தாலும் ஆர்வத்துடன் படிக்க வேண்டும். முயற்சி செய்து படித்தால் முதல் இடத்தில் வரலாம். அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள, திறமையை வளர்த்துக்கொள்ள, மாணவர்கள் அனைவரும் தினந்தோறும் செய்தித்தாள் படிக்க வேண்டும்” என்றார். 

இந்த நிகழ்சியில் சீர்காழி டி.எஸ்.பி பழனிசாமி, பள்ளி தலைமையாசிரியர் ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பூவராகவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.