சென்னை: சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு, சுதந்திர போராட்ட தியாகிகள், வீரர்களின் வாரிசுகளுக்கான ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவு, அமுதப் பெருவிழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் சிறப்பான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை 8.48 மணிக்கு அணிவகுப்பு வாகனங்கள் புடை சூழ, கோட்டை கொத்தளத்துக்கு வந்தார். அவரை தலைமைச் செயலர் வெ.இறையன்பு வரவேற்றார்.
அதன்பின், ராணுவ முப்படை அதிகாரிகளான மேஜர் ஜெனரல் எஸ்.எஸ்.தாஹியா, ரியர் அட்மிரல் எஸ்.வெங்கட்ராமன், ஏர் கமாண்டர் விபுல் சிங், இன்ஸ்பெக்டர் ஜெனரல் எ.பி.படோலா மற்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜபி பி.தாமரைக்கண்ணன் ஆகியோரை முதல்வருக்கு தலைமைச் செயலர் அறிமுகம் செய்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, பல்வேறு காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார். திறந்த ஜீப்பில் சென்று, பேரிடர் மீட்புக்குழு, தமிழ்நாடு அதிரடிப்படை ஆண்கள், சென்னை காவல் அதிரடிப்படை பெண்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், நீலகிரி காவல் மற்றும் கடலோர காவல் குழுமம் உள்ளிட்ட 7 படைப் பிரிவினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
அதன்பின், கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், சரியாக 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முதல்வர் தனது சுதந்திர தின உரையில் பேசியதாவது:
நம் நாடு ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றதன் 75-வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியா கத்தால் பெற்ற விடுதலை இது.
இந்தியாவில் மாநில முதல்வர்கள் அனைவரும் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன். 75 ஆண்டுகளாக விடுதலைக் காற்றை சுவாசிக்க காரணமாக அமைந்த வீரத்தியாகிகள் அனைவருக்கும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டிலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழகம்தான். அடிமைப்படுத்துதல் என்றைக்கு தொடங்கியதோ, அன்றைய நாளே விடுதலை முழக்கத்தை எழுப்பிய மண், நம் தமிழ் மண்ணாகும்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 1,095 பேருக்கு மாதந்தோறும் தியாகிகளுக்கான நிதிக் கொடையை வழங்கி வருகிறோம். நாட்டுக்காக போராடிய தியாகிகளை போற்றும் வகையில் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கும், அவர்கள் இறக்க நேரிட்டால், வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய விடுதலையின் பவள விழா நிறைவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
* விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாநில அரசின் மாதாந்திர ஓய்வூதியத் தொகை, ஆகஸ்ட் 15 முதல் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருதுபாண்டிய சகோதரர்கள், சிவகங்கை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம், 16 லட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,947.60 கோடி கூடுதலாக செலவாகும்.
* விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பு குறித்து எதிர்கால இளம் சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ‘விடுதலை நாள் அருங்காட்சியகம்’ ஒன்று சென்னையில் அமைக்கப்படும்.
பல வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றிணைந்து வாழ்வதே இந்தியாவைக் காக்கும். வெளிப்புற சக்திகளின் தாக்குதலை வெல்ல வேண்டுமானால், உள்புற ஒற்றுமை என்பது மிகமிக அவசியம். 75 ஆண்டு கால விடுதலை இந்தியாவின் வரலாற்றை, மேல்நோக்கி நகர்த்துவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒற்றுமை உணர்வோடு வாழ்வோம். அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் மூலமாக ஒன்றிய இந்தியாவை வளப்படுத்துவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
பொதுமக்களுக்கு அனுமதி
கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சுதந்திர தினம், குடியரசு தினங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. தொற்று பாதிப்பு குறைந்ததால் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக் கப்பட்டிருந்தது.
இதனால், போர் நினைவுச்சின்னம் முதல் கோட்டை கொத்தளம் வரை சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டிருந்து நிகழ்ச்சிகளை பார்த்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தேசியக் கொடியை கையில் ஏந்தி, உற்சாகத்துடன் நிகழ்ச்சியில் பங் கேற்றனர்.