“அரசை நாங்கள் நடத்தவில்லை; நிர்வகிக்க மட்டுமே செய்கிறோம்” என, கர்நாடக மாநில அமைச்சர் ஜே.சி.மதுசுவாமி பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பி.எஸ்.எடியூரப்பாவுக்கு பிறகு முதலமைச்சராக பதவி ஏற்ற பசவராஜ் பொம்மை மீது, அதிருப்தி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும், பசவராஜ் பொம்மை முதலமைச்சரான பிறகு, மாநிலத்தில், வகுப்புவாத கலவரம் உள்ளிட்ட பிரச்னைகள் தலைதூக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது, பாஜகவுக்கு பின்னடவை ஏற்படுத்தி உள்ளதாகவும் அக்கட்சி மூத்தத் தலைவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
வரும் 2023 ஆம் ஆண்டு கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, முதலமைச்சர் பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியது. எனினும், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலை பசவராஜ் பொம்மை தலைமையில் சந்திக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், “அரசை நாங்கள் நடத்தவில்லை; நிர்வகிக்க மட்டுமே செய்கிறோம்” என, கர்நாடக மாநில சட்டத் துறை அமைச்சர் ஜே.சி.மதுசுவாமி பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கருத்துக்கு, அமைச்சர் முனிரத்னா கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் அரசை நிர்வகிக்கிறோம் என்று ஜே.சி.மதுசுவாமி நினைத்தால், கர்நாடக சட்டத் துறை அமைச்சர் பதவியில் இருந்து அவர் உடனடியாக விலக வேண்டும். அவர் அரசின் ஓர் அங்கம். ஒவ்வொரு அமைச்சரவை கூட்டத்திலும் அவர் அங்கம் வகிக்கும் நபர். அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு, அவர் இவ்வாறு கூறியிருப்பது பொறுப்பற்ற செயல்” என்று காட்டமாக தெரிவித்து உள்ளார்.
முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மீது அதிருப்தி நிலவி வருவதாக ஏற்கனவே தகவல் பரவி வரும் நிலையில், சட்டத் துறை அமைச்சர் ஜே.சி.மதுசுவாமியின் ஆடியோ மாநில அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது. இதற்கிடையே, “பாஜக மற்றும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு உதவும் பட்சத்தில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்” என, அமைச்சர் ஜே.சி.மதுசுவாமி பேட்டி அளித்துள்ளார்.