அரச நிறுவனங்களின் தலைவர்கள் தொடர்பான புதிய நியமனங்களுக்கு நியாயமான காரணங்கள் தேவை

அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளில் புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களுக்கு, முன் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையிலான குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அமைச்சரவை செயலாளர் டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோ ஆகியோர் செயற்படுவார்கள்.

இந்தக் குழுவின் செயலாளராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர்கள் பதவிகளில் மாற்றம் செய்ய வேண்டுமாயின், நியாயமான காரணங்களுடன் இந்தக் குழுவிடம் பரிந்துரைகளைச் சமர்ப்பித்து முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன் உடன்பாடுகளின்றி, அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளில் மாற்றம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் அவ்வப்போது விடுக்கப்பட்ட எழுத்து மூலமான கோரிக்கைகள் மற்றும் சில முறைசாரா நியமனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் நேரடியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் மற்றும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சுக்கும் இக்கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-15

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.