“இந்தியா இப்போது அணு ஆயுதங்களை கொண்ட நாடு. நம்மிடம் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்வதற்கான தகுதி உள்ளது. நாம் அதை ஒருபோதும் ஆத்திரத்துக்காக பயன்படுத்த மாட்டோம்.” போக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பின்னர் வாஜ்பாய் கூறிய வார்த்தைகள் இவை. மேற்கத்திய நாடுகளின் கண்களில் மண்ணைத்தூவி அணுகுண்டு சோதனை நடத்தியவர் வாஜ்பாய். இதற்காக கடும் கண்டனங்கள் எழுந்து, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டபோதிலும், இந்தியாவை அணு ஆயுதங்கள் கொண்ட நாடாக்கியவர் அவர்.
இந்தியாவின் தன்னிகரற்ற தலைவராக விளங்கிய அடல் பிஹாரி வாஜ்பாய், மக்களவை உறுப்பினராக 9 முறை, மாநிலங்களவை உறுப்பினராக 2 முறை, இந்தியாவின் பிரதமராக 3 முறை என இந்திய அரசியலில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் வாஜ்பாய். நாடாளுமன்ற விவாதங்களில் இவரது ஆழமான கருத்துகளும், அவற்றை இவர் வெளியிடும் பாங்கும் மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்பட்டன. தனது நம்பிக்கைகளில் உறுதியாக இருந்த வாஜ்பாய், சில நேரங்களில் ஆர்எஸ்எஸ் சிந்தனைகளிலிருந்தும் மாறுபட்டுள்ளார்.
இன்றைக்கு பாஜக தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக விளங்குகிறது என்றால், அதற்கு அக்கட்சியை தோற்றுவித்த வாஜ்பாய் போட்ட விதைதான் காரணம். இன்று மிகப் பெரிய விருட்சமாக வளர்ந்து செல்வாக்குடன் பாஜக இருப்பதற்கு முக்கியக்காரணம் வாஜ்பாய். காங்கிரஸ் அல்லாத கட்சியை சேர்ந்த பிரதமராக, 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த பெருமை வாஜ்பாயையே சாரும். கவிதைகளில் சிறந்து விளங்கியவர் அவர், தனது கவிதைகளை புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்.
இந்தியா ஒளிர்கிறது என்று உரக்க முழங்கிய வாஜ்பாய் பொற்கால ஆட்சியை இந்தியாவுக்கு வழங்கினார். ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த ஏட்டுக்கல்வி அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாகக் கிடைக்க நாடு முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்கிற திட்டத்தை கொண்டு வந்தார். கல்விக்காக அவர் கொண்டு வந்த சர்வ ஷிக்ஷா அபியான் திட்டம் (Right to education) மூலம் பலர் கல்வி வாய்ப்பை பெற்றனர். கல்வித்துறையில் ஏற்பட்ட முக்கிய மாற்றமாக இது இன்றளவும் பார்க்கப்படுகிறது. வாஜ்பாய் கொண்டு வந்த புதிய தொலைதொடர்பு கொள்கையால், இந்தியாவின் அபரிமிதமான தொலைதொடர்பு வளர்ச்சி சாத்தியமானது.
நிதிப் பொறுப்புச் சட்டம் என்று ஒரு சட்டத்தை இயற்றி அதன் மூலம் நிதி பற்றாக்குறையைக் குறைத்தது வாஜ்பாய் அரசு. ஜிடிபியை 7 புள்ளிகளுக்கு மேல் கொண்டு சென்று, வளர்ச்சியை நோக்கி இந்தியாவை வழிநடத்த விரும்பியவர் வாஜ்பாய். பூகம்பம், வறட்சி, எண்ணெய் நெருக்கடி போன்றவை இந்தியாவை ஆட்டிப்படைத்த போதெல்லாம் இந்தியாவின் பொருளாதாரத்தை சரியாமல் பார்த்துக் கொண்டவர் வாஜ்பாய்.
1998ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில், பொக்ரான் என்ற பாலைவனப் பகுதியில் 5 அணுகுண்டுகளை அப்துல் கலாம் தலைமையிலான குழுவைக் கொண்டு சோதனை செய்ய வைத்ததன் மூலம், மிகப் பெரிய அணு ஆயுதம் கொண்ட நாடுகளையும் வாஜ்பாய் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நட்புறவு ஏற்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை வாஜ்பாய் மேற்கொண்டார். லாகூர் – டெல்லி இடையே பேருந்து சேவையை 1999ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிவைத்து முதல் ஆளாய் பயனித்தார். அதே ஆண்டு லாகூரில் நடைபெற்ற கூட்டத்தில் இரு நாடுகளும் ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. `லாகூர் ஒப்பந்தம்’ எனப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான பிரச்னைகளைத் தீர்க்கவும், வர்த்தக உறவை மேம்படுத்தவும், இருநாட்டு நட்புறவை வலுப்படுத்தவும் உறுதியளிக்கும் விதமாக அமைந்தது.
ஆனால், பாகிஸ்தான் இந்தியாவில் ஊடுருவி பிரச்சனை ஏற்படுத்தியது. இதனால், கார்கில் போர் மூண்டது. 1999ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கார்கில் போரை ஆப்ரேஷன் `விஜய்’ என்ற பெயரில் நடத்தி வெற்றி வாகை சூடினார் வாஜ்பாய். பிராந்திய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சீனாவுடன் வணிக கூட்டு அமைத்தார் வாஜ்பாய்.
நாட்டின் வளர்ச்சியில் சாலைகளுக்கும் முக்கியப் பங்கு இருப்பதை மனதில்கொண்டு வாஜ்பாய் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம்தான் தங்க நாற்கரச் சாலை திட்டம். கொல்கத்தா, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நான்கு பெருநகரங்களை இணைக்கும் 5,846 கி.மீ தூரம் கொண்ட இந்த சாலையினால் இன்றளவும் பயன்கள் ஏராளம். டெல்லி மெட்ரோ ரயில் சேவையை முதன்முதலாகத் தொடங்கி வைத்தவர் வாஜ்பாய்.
இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்று தன்னிகரற்ற தலைவராக விளங்கிய வாஜ்பாய், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி தனது 93ஆவது வயதில் காலமானார். அவருடைய பிறந்தநாளான டிசம்பர் 25ஆம் தேதி நல்லாட்சி நிர்வாக தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா ஒளிர்கிறது என்று உரக்க முழங்கிய வாஜ்பாய், இந்தியாவின் வளர்ச்சியில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்.