இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே ரயில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த ரயிலுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆதரவு காரணமாக தற்போது அடுத்தடுத்து வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் மூன்றாவது வந்தே பாரத் ரயில் தயாராகி விட்டதாகவும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து விரைவில் இந்தியாவின் மூன்றாவது வந்தே பாரத் ரயில் பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.
பாரத் பெட்ரோலியம் தனியார்மயமாக்கல் திட்டத்தை கைவிட்ட மோடி அரசு.. ஏன் தெரியுமா..?!

வந்தே பாரத் ரயில்
சென்னை ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்பட்ட 3வது வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டத்தை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்றைய சுதந்திர தினத்தில் தொடங்கி வைத்தார். இந்த ரயில் சென்னையிலிருந்து பாடி வரை வெற்றிகரமாக சோதனை பயணத்தை முடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தயாரிப்பு
வந்தே பாரத் புதிய ரயில் உலகத்தரம் வாய்ந்தது என்றும், புதுமையான பல அம்சங்கள் இருப்பதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார். சென்னை ஐசிஎப் பிரிவுகளில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டதை அடுத்து அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் நேரில் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.

75 வந்தே பாரத் ரயில்கள்
இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி கடந்த ஆண்டு 75 வந்தே பாரத் ரயில்களை உருவாக்க இலக்கு வைத்து இருந்துள்ளதாகவும் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முதல் வந்தே பாரத் ரயில்
2019ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி டெல்லி கான்பூர் – வாரணாசி வழித்தடத்தில் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு தற்போது மிகப்பெரிய வரவேற்பு பயணிகள் மத்தியில் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தானியங்கி கதவுகள்
இந்த ரயிலில் சொகுசாக பயணம் செய்வதற்காக ஒவ்வொரு பெட்டியிலும் பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து ரயில் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக நவீனரக கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

400 வந்தே பாரத் ரயில்
இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் மேலும் 400 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் என்றும் முக்கிய நகரங்களை இந்த ரயில்கள் இணைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐசிஎப் ஊழியர்கள்
மேலும் அந்த ரயில் பெட்டி தயாரிப்பில் ஈடுபட்ட சென்னை ஐசிஎப் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்ததோடு ரூபாய் 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் அறிவித்தார். மேலும் மின் தடை ஏற்பட்டாலும் இயங்கும் வகையில் நான்கு அவசரகால மின்சார இயக்கம் கொண்ட அம்சம் வந்தே பாரத் ரயிலில் உள்ளதாகவும் முன்புறமும் பின்புறமும் கண்காணிக்க 4 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், விபத்து நேரிட்டால் 4 அவசரகால வெளியேறும் ஜன்னல்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்தார்.

ஜிபிஎஸ் வசதி
மேலும் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயை அணைக்க ஏரோசால் அடிப்படையிலான தீயை உணரும் கருவி இந்த ரயிலில் உள்ளது என்றும், மேலும் ஒரே வழித்தடத்தில் எதிரெதிராக ஏதாவது ரயில்கள் வந்தால் மோதல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக ஜிபிஎஸ் அடிப்படை வசதியும் இதில் உண்டு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த தலைமுறை ரயில்
மொத்தத்தில் அடுத்த தலைமுறை பயன்படுத்தும் வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் மிக விரைவில் சர்வசாதாரணமாக அனைத்து ரயில் நிலையங்களிலும் இயக்கப்படும் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
New Vande Bharat train ready to be rolled out! India’s semi-high speed train!
New Vande Bharat train ready to be rolled out! India’s semi-high speed train! | இந்தியாவின் 3வது வந்தே பாரத் ரயில்… சென்னையில் வெற்றிகரமான சோதனை!