இலங்கையில் வெளியாகும், ‘தமிழன்’ நாளிதழின் ஆசிரியர் சிவா ராமசாமி: சீன கப்பல் விவகாரம் தொடர்பாக, இலங்கை அரசிடம் இந்திய துாதர் பேசியதாக, எங்களுக்கு தகவல்கள் கிடைத்தன.
இதன்பின் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ‘இந்தியா ஏற்கனவே பல உதவிகளை செய்து விட்டது. தெற்காசியா முழுதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால், இனி இந்தியா நமக்கு கடனுதவிகள் வழங்காது. ‘இருந்தாலும் இந்தியாவின் உதவிகளை மறக்க முடியாது. சீனாவையும், புறந்தள்ளி விட முடியாது’ என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசியிருக்கிறார்.
சிங்கள கட்சிகளும், சீனாவுடன் நல்லுறவு வைத்துக் கொள்வதையே விரும்புகின்றன. சீனா அழுத்தம் கொடுத்தால், சர்வதேச நிதியத்திடம் இருந்து உதவி கிடைக்கும் என்பதால், அந்நாட்டிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது சிங்கள கட்சிகளின் கருத்து.சீன கப்பலை அனுமதிக்கும் முடிவு, ரணில் அதிபராவதற்கு முன் எடுக்கப்பட்டது தான். ஆனாலும், தற்போது அதிகாரத்தில் இருக்கும் அவர், சீனாவிடம் பேசி, அந்த முடிவை மறுபரிசீலனை செய்யத் தயாராக இல்லை. இது, நான் அதிபராவதற்கு முன் எடுக்கப்பட்ட முடிவு என்று சொல்லி, தப்பித்துக் கொள்ளவே நினைக்கிறார்.
ஏற்கனவே மகிந்த ராஜபக் ஷே ஆட்சியில், இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீன ராணுவ கப்பல்கள், கொழும்பு துறைமுகத்துக்கு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பின் நடந்த தேர்தலில், இந்தியாவின் தலையீட்டால் மகிந்த கட்சி தோல்வியுற்று, ஆட்சி மாற்றம்நிகழ்ந்தது. தற்போதுமீண்டும் அதேபோன்றதொரு நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த முறை இலங்கைக்கு செய்து வரும் உதவிகளை, இந்தியா முற்றிலுமாக நிறுத்தி விடும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் உண்டாகும்.பொருளாதார நெருக்கடியில், இலங்கைக்கு பெரும் உதவிகளை செய்தது இந்தியா மட்டுமே. உணவு கொடுத்தவன் கையையே கடிப்பது போன்ற தவறையே இலங்கை செய்து கொண்டிருக்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை, 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்திருக்கிறது சீனா.
அந்த துறைமுகத்தில், சீன கப்பல் வந்து நிற்பது, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு மட்டுமின்றி, இலங்கையின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் தான். எரிபொருள் நிரப்புவதற்கு இரண்டு நாட்கள் போதுமானது. ஒரு வார காலம் கப்பல் நிற்பது ஏன்? செயற்கைக்கோள் ஆராய்ச்சி என்கின்றனர். ஆனால், சீன கப்பல் இந்தியாவை உளவு பார்க்க வருவதாகவே தோன்றுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement