கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மகள், நேற்றைய சுதந்திர தின விழாவில் பள்ளி அளவிலான பேச்சுப்போட்டியில் பங்கேற்றிருந்திருக்கிறார். தனது அந்த உரையில், `நான் மேஹ்னாஸ் கப்பன். பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மகள். ஒரு குடிமகனின் சுதந்திரம் அனைத்தும் உடைக்கப்பட்டு, இருட்டு அறைக்குள் தள்ளப்பட்ட ஒரு குடிமகன் அவர்’ என்று பேசியுள்ளார்.
சித்திக் கப்பன், டெல்லி வாழ் மலையாள பத்திரிகையாளர். அவர் UAPA (Unlawful Activities (Prevention) Act) எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த அக்டோபர் 2020 முதல் சிறையில் உள்ள அவர், ஹத்ராஸில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட செய்தி குறித்து சேகரிக்க சென்றபோது கைது செய்யப்பட்டிருந்தார். இவரது மகள், நேற்று நாட்டின் 76-வது சுதந்திர தின நாளில் தனது பள்ளி அளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்திருந்தார். அப்போது பேசிய அவர், “நான் மேஹ்னாஸ் கப்பன். பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மகள். ஒரு குடிமகனின் சுதந்திரம் அனைத்தும் உடைக்கப்பட்டு, இருட்டு அறைக்குள் தள்ளப்பட்ட ஒரு குடிமகன் அவர்” என்று தனது உரையை தொடங்கினார்.
தொடர்ந்து பேசுகையில், “இந்தியா தனது 76-வது சுதந்திர வருடத்தை கொண்டாடும் இந்த பெருமைமிக்க தருணத்தில், அசைக்க முடியாத பெருமையும் அதிகாரமும் கொண்ட ஒரு இந்தியராக நான் சொல்கிறேன் – `பாரத் மாதா கி ஜே’. இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் யாவும் காந்திஜி, நேரு, பகத்சிங் மற்றும் எண்ணற்ற மாபெரும் புரட்சியாளர்கள் மற்றும் புரட்சிகர வீரர்களின் தியாகத்தின் விளைவு. இன்று இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தான் என்ன பேச வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எந்த மதத்தில் இருக்க வேண்டும் என்பதை தானே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உள்ளது. பல தேர்வுகளும், அதை வெளிப்படுத்தும் உரிமையும் உள்ளது. இதேபோல தனது தேர்வை யாராவது நிராகரித்தாலோ, அதை கைவிட சொன்னாலோ… அதை எதிர்த்து கேள்விக்கேட்கும் உரிமையும் இருக்கிறது.
ஆகஸ்ட் 15-ம் தேதியன்று உயிர்த்தெழுந்த இந்தியாவின் கண்ணியம், எவர் முன்னிலையிலும் சமரசம் செய்யப்படக் கூடாது. ஆனால் இன்றளவும் சில இடங்களில் அந்த சமரசங்கள் செய்யப்படுகின்றன. அந்த சமரசங்களாலேயே சாதி, மத, அரசியல் காரணங்களால் வன்முறை எழுகிறது. இவை அனைத்தையும் நாம் அனைவரும் அன்புடனும் ஒற்றுமையுடனும் களைய வேண்டும். அமைதியின்மையின் நிழல் கூட துடைக்கப்பட வேண்டும். ஒன்றாக, நாம் இந்த வாழ்க்கையை வாழ வேண்டும்.
இந்தியாவை நாம் இன்னும் சிறப்பான உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். எதிர்காலத்துக்காகவும், சிறப்பான நாளைக்காகவும் நாம் உழைக்க வேண்டும். இந்தியாவின் பிரிவகளற்ற, முரண்பாடுகள் அற்ற எதிர்காலத்தை உருவாக்குவது குறித்து நாம் கனவுகாண வேண்டும். இந்த நேரத்தில் இந்திய விடுதலைக்காகப் போராடிய அனைத்து வீரர்களையும் நினைவுகூர்ந்து, இந்தியாவின் சாமானிய குடிமக்களின் சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது என்பதை சொல்ல விரும்புகிறேன். ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்” என்றார்.
இவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM