இந்தியாவில் அடுத்த ஆண்டு 10 சதவீதம் சம்பள உயர்வு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சம்பள உயர்வு வந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றின் கருத்துக்கணிப்பு அறிக்கையின்படி இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் 2023ஆம் ஆண்டில் 10 சதவீத சம்பள உயர்வை அளிக்கும் என்று கூறியுள்ளது.
சம்பள உயர்வு
உலகளாவிய ஆலோசனை மற்றும் தீர்வுகள் நிறுவனமான வில்லிஸ் டவர்ஸ் வாட்சனின் சம்பள பட்ஜெட் திட்டமிடல் அறிக்கை வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிக்கையில் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் 2023ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 10 சதவீதம் சம்பள அதிகரிப்பு செய்ய இருப்பதாகவும் அதற்கான பட்ஜெட்டை தயாரித்து இருப்பதாகவும் கூறியுள்ளது.

சம்பள உயர்வும் சம்பள குறைப்பும்
இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் 55 சதவீதம் பேர் கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் சம்பள உயர்வுக்கு பட்ஜெட் போட்டு உள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் 24.4 சதவீத நிறுவன உரிமையாளர்கள் சம்பள பட்ஜெட்டில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2021-22 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 5.4 சதவீதம் பேர் சம்பளத்தை குறைப்பதற்காக பட்ஜெட் போட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

10% சம்பள உயர்வு
இந்தியாவை பொருத்தவரை அடுத்த ஆண்டு 10 சதவீத சம்பள உயர்வு பல நிறுவனங்களில் இருக்கும் என்று அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதேபோல் சீனாவில் 6 சதவீதமும், ஹாங்காங்கில் 4 சதவீதமும் சிங்கப்பூரில் 4 சதவீதமும் ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆய்வு அறிக்கை
2022ஆம் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் உள்ள 590 நிறுவனங்கள் உள்பட உலகின் 178 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் படி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனங்களின் லாபமும் நஷ்டமும்
இந்தியாவில் உள்ள 42 சதவீத நிறுவனங்கள் அடுத்த ஒரு வருடத்தில் அதிக வருவாயை மேற்கொள்ளும் என்றும் 7.2 சதவீத நிறுவனங்கள் மட்டுமே நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

எந்தெந்த துறைகள்?
தொழில்நுட்பம், பொறியியல், விற்பனை, தொழில்நுட்பத் திறன் கொண்ட வர்த்தகம், மற்றும் நிதி ஆகியவை நல்ல லாபத்தில் சென்று கொண்டிருப்பதாகவும் அடுத்த ஒரு வருடத்தில் இந்த துறைகளில் ஆள்சேர்ப்பு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

2023ல் அதிக லாபம்
நிதி சேவைகள், வங்கி, தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் கேமிங் துறைகளில் 10.4 சதவீதம் வரை சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. 2022ஆம் ஆண்டை போலவே 2023ஆம் ஆண்டிலும் அனைத்து வகை தொழில்களும் அதிக லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் என்றும் குறிப்பாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10% Salary Hike Likely Next Year; Highest In Asia-Pacific!
10% Salary Hike Likely Next Year; Highest In Asia-Pacific! | இந்திய நிறுவன ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. சம்பள உயர்வு எவ்வளவு தெரியுமா?