சென்னை: தமிழகம் முழுவதும் 180-க்கும்மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான வல்லுநர் குழுக் கூட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடை பெற்றது.
இக்கூட்டத்தில் இணை ஆணையர் (திருப்பணி) பொன். ஜெயராமன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர் கோவிந்தராஜ பட்டர், ஆனந்த சயன பட்டாச்சாரியர், கே.சந்திரசேகர பட்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, இந்து சமயஅறநிலையத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆதிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருவிடைமருதூர் தொப்பை பிள்ளையார் கோயில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழனி ஆண்டவர் கோயில், திருச்சி மாவட்டம்துறையூர் பிரசன்ன வெங்கடாஜல பதி கோயில், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானியம்மன் கோயில், செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் மாவட்டம் சிறுவஞ்சூர் திருவாலீஸ்வரர் கோயில் உட்பட 180-க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இக்குழு பரிந்துரையின் அடிப்படையில் கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள்தொடக்கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.