நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாடுகளுக்கும் பிரச்சனை எழுகிறது. இறந்த மனிதனை தகனம் செய்யவதில்கூட பிரச்னையா? என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்த பால்பாண்டி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி, கீழத்திருத்தங்கல் கிராமத்தில் சுமார் 2 ஹெக்டேர் பரப்பளவில் நீர்நிலை உள்ளது. இந்த நீர்நிலைக் கண்மாயே விவசாயத்திற்கும், இப்பகுதியின் நிலத்தடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
இந்த நீர்நிலையை ஆக்கிரமித்து உள்ளாட்சி அமைப்பு சார்பில் தகன மேடை அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர்நிலையில் தகன மேடையை அமைக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, சிவகாசி, கீழத்திருத்தங்கல் கிராமத்தில் உள்ள நீர்நிலை கண்மாயில் தகனமேடையை அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்.” எனக் கேட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, ” நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாடுகளுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இறந்த மனிதனை தகனம் செய்யவதில் கூட பிரச்னையா? எனக் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, நீர்நிலை என மனுதாரர் கூறியுள்ள இடம் இதுவரை நீர்நிலை என வகைப்படுத்தப்படவில்லை. அதற்கு முன்னதாக நீர்நிலை எனக் கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனை ஏற்க இயலாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
