இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இந்திய அரசு இலங்கைக்கு டோர்னியர்-228(DORNIER-228) என்ற கடல்சார் உளவு விமானம் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளது. இதனை, இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் கோபால் பாக்லே, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கினார். இவ்விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் கோபால் பாக்லே, இந்திய கப்பற்படை துணை தலைவர் வைஸ் அட்மிரல் எஸ்.என்.கோர்மேட் மற்றும் இந்திய-இலங்கை கப்பற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன் சிறப்புகள் என்னென்ன?
இரண்டு என்ஜின்கள் கொண்ட இந்த டோர்னியர்-228 ரக விமானமானது இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை.
16.56மீட்டர் உயரமும் 4.86மீட்டர் நீளமும் கொண்ட இந்த டோர்னியர்-228 ரக விமானத்தில் கிட்டதட்ட 19 வீரர்கள் பயணிக்கலாம். மேலும் இந்த டோர்னியர்-228 ரக விமானமானது 3,900 கிலோ எடையும் 1,885 கிலோ எரிபொருள் திறனும் கொண்டது.
அதிநவீன வசதிகள் கொண்ட இந்த டோர்னியர்-228 ரக விமானத்தை இந்திய கடல்சார் கண்காணிப்பு மற்றும் பேரிடர் நிவாரணம் போன்ற பணிகளுக்கு இந்திய கடற்படையின் உளவு பிரிவினர் மற்றும் கடலோர காவல் படைகளால் பயன்படுத்தப்படுகிறது.
இலங்கையின் கடற்சார் கண்காணிப்பு மற்றும் இலங்கையின் பாதுகாப்புக்காக இந்த டோர்னியர்-228 என்னும் விமானத்தை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது. இந்த விமானத்தை இயக்க, 15 இலங்கை விமானம் மற்றும் கப்பற்படையினருக்கு இந்தியா பயிற்சி அளித்துள்ளது.
இதற்கிடையே சீன உளவு கப்பலான ‘யுவான் வாங் 5’ ஆகஸ்ட் 11-ம் தேதி இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டா தெற்கு துறைமுகத்தில் வந்தடைய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அது இலங்கை அதிகாரிகளால் அனுமதி பெறாததால் தாமதம் ஆனது. இலங்கைக்கு வரவிருந்த இந்த கப்பலின் கண்காணிப்பு அமைப்புகள், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆய்வுகளை கண்காணிக்கும் என்றும், அதனால் இந்த கப்பல் இலங்கைக்கு வருவது இந்தியாவுக்கு உடன்பாடில்லை என்றும் இலங்கைக்கு இந்தியா வலியுறுத்தியது. எனினும் இலங்கை இந்த சீன உளவு கப்பலுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. இன்று சீன உளவுக் கப்பல் இலங்கை வந்தடைந்தது.
முன்னதாக, “சீன கப்பலாகிய ‘யுவாங் வாங் 5’ இலங்கைக்கு வருவிருப்பதை விரும்பாத இந்தியா, அந்த கப்பலின் வருகையை தடுக்க வேண்டும் என்று தனது அதிகாரவர்க்கத்தை பயன்படுத்தி இலங்கையை அடக்கி ஆள முயற்சி செய்கிறது” என்ற சீன கருத்தை இந்தியா மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விமான கையளிப்பு நிகழ்ச்சியில் பேசிய கோபால் பாக்லே, “இந்தியாவுடனான ஒத்துழைப்பு மற்றும் இலங்கை கடற்சார் பாதுகாப்பு மற்றும் அதன் தேவைகளுக்காக இந்த விமானம் பரிசளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பலம் அதன் நட்பு நாடுகளின் பலத்தை கூட்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்” என்று கூறினார். இந்த விமான பரிசளிப்பு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் உறவை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.