இலவச உணவு தானிய திட்டம் செப்.,க்கு பிறகு நீட்டிக்கப்படுமா?| Dinamalar

வெளி மாநில தொழிலாளர்கள், ஏழை எளிய மக்களுக்கு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இலவச உணவு தானிய திட்டம், செப்., மாதத்துக்கு பிறகு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.கொரோனா தொற்று பரவலால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, வெளி மாநில தொழிலாளர்கள், ஏழை மக்கள் வேலை இழந்தனர்.

அடுத்த வேளை உணவே கேள்விக்குறியான நிலையில், ரேஷன் கடைகளில், அவர்களுக்கு மாதம்தோறும் இலவச உணவு தானியங்கள் அளிக்கும் திட்டத்தை, மத்திய அரசு 2020 ஏப்ரலில் அறிவித்தது. இதன் வாயிலாக, 80 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டம், கடந்த இரண்டரை ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, மத்திய அரசுக்கு, 3.40 லட்சம் கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது.
இது, அடுத்த மாதம் 30 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்ட நிலையில், இந்த இலவச உணவு தானிய திட்டம் தேவையற்றது என்ற கருத்து, பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
உணவு பாதுகாப்பு மற்றும் நிதி நிலை அடிப்படையில், இந்த திட்டத்தை தொடர்வது தேவையற்றது என்ற பரிந்துரையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பட்ஜெட் பற்றாக்குறை 6.40 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், பெரிய அளவிலான மானியங்கள், வரி சலுகைகள் தேவையில்லை என, மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை எச்சரித்துள்ளது.
இந்த திட்டம், மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்டால், அரசுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். மேலும், அரிசி மற்றும் கோதுமை கையிருப்பும் வழக்கத்தை விட குறைவாக இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இலவச உணவு தானிய திட்டம் நீட்டிக்கப்பட வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக, புதுடில்லி வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன.
– நமது சிறப்பு நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.