“இன்று நாம் எதிர்கொள்ளும் இரண்டு பெரிய சவால்கள், ஒன்று ஊழல், மற்றொன்று உறவுமுறை (நெப்போட்டிசம்). ஊழல், நாட்டைக் கரையான்போல் குழிபறிக்கிறது, அதை எதிர்த்து நாம் போராட வேண்டும். நாட்டில் ஊழலுக்கு எதிராக முழு பலத்துடன் போராட வேண்டும்” – நாட்டின் 76-வது சுதந்திரதினவிழா உரையில் பிரதமர் மோடி பல விஷயங்களைப் பேசியிருந்தாலும், அவர் இறுதியாகக் கூறிய இந்த வார்த்தைகள் அரசியல் அரங்கில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி. தொடர்ந்து அவர் பேசும்போது, “இந்த சுதந்திர தினத்தில் அனைத்து இந்தியர்களுக்கும், இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய தீர்மானத்துடன், புதிய திசையை நோக்கி அடியெடுத்துவைக்கும் நாள் இன்று. கடமைப் பாதையில் தங்கள் இன்னுயிரை ஈந்த காந்திஜி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாபாசாகேப் அம்பேத்கர், வீர சாவர்க்கர் போன்றோருக்கு குடிமக்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறார்கள்” என்றவர், வேலு நாச்சியார், விவேகானந்தர், தாகூர் ஆகியோர் பங்களிப்பு குறித்தும் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மங்கள் பாண்டே, தாந்தியா தோபே, பகத் சிங், சுகதேவ், ராஜகுரு, சந்திரசேகர ஆசாத், அஷ்பகுல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில், மேலும் ஆங்கிலேயர் ஆட்சியின் அடித்தளத்தை அசைத்த நமது எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு இந்த தேசம் நன்றி கூறுகிறது. மேலும் போராட்டத்தில் பங்கெடுத்து வெளியே தெரியாமல் புறக்கணிக்கப்பட்டவர்களையும் நினைவுகூர்வோம். பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட சுதந்திர வீரர்களை வெளிக்கொண்டு வருவோம்” என்றார்.
தனது உரையை முடிக்கும் முன்பு, “ஊழல் மற்றும் குடும்ப அரசியல் இரண்டும் நாட்டைக் கரையான்போல் அரிக்கிறது” என்றவர் `ஜெய் ஹிந்த்’ என முழங்கி தனது உரையை நிறைவு செய்தார். மோடியின் இந்த உரையை ஆளும் பாஜகவினர் உள்ளிட்ட ஒரு தரப்பினர் வரவேற்றாலும், கடுமையான எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பொதுமக்களிடம் கொள்ளையடித்துத் தேர்ந்த தொழிலதிபர் நண்பர்களின் பாக்கெட்டை நிரப்புபவர்கள் மகாத்மா காந்தியின் பெயரை எடுக்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்டில் 84 சதவீதத்தினர் குறைந்த வருமானம் கொண்டவர்களாக உள்ளனர். இந்தியா மீண்டும் ஏழ்மை நாடுகளில் ஒன்றாக உள்ளது. மேலும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. தொழில்துறை நண்பர்களின் 10 லட்சம் கோடி ரூபாய் கடனை 5 ஆண்டுகளில் தள்ளுபடி செய்தவர்களின் முயற்சிகள் மறைக்கப்படவில்லை” என கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியாகாந்தியும் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில், மோடி மிக முக்கியமாகக் குறிப்பிட்டு பேசியிருக்கும் ஊழல் குடும்ப அரசியல் இரண்டும் மக்கள் மத்தியில் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம்,
ப்ரியன் :
“ஊழல், குடும்ப அரசியல் இரண்டும் பலவருஷ காலம் பாஜக பேசிவரும் ஒரு விஷயம்தான். வாரிசு அரசியல் மீதான அவரின் விமர்சனம் என்பது நேரடியாக நேரு குடும்பத்தின் மீதான தாக்குதல்தான். அதேவேளை, தமிழகத்தில் ஸ்டாலின், ஒடிஷாவில் நவீன் பட்நாயக், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே என மாநிலக் கட்சிகளைத் தாக்குவதற்கும் இந்த யுக்தியைப் பயன்படுத்துகிறார்கள். பாஜக-விலும் மூத்த தலைவர்களின் வாரிசுகள் பலர் கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில்தான் இருக்கிறார்கள். ஆனால், கட்சியின் தலைவராக வாரிசுகள் யாரும் வருவதில்லை என்பதை வைத்து தப்பித்துக் கொள்கிறார்கள். அதைவைத்து அரசியல் செய்கிறார்கள். ஊழலை எடுத்துக்கொண்டாலும் தமிழ்நாடு, ஆந்திரா, மேற்குவங்கம், மகாராஷ்டிரா, தெலங்கானா என பிராந்தியக் கட்சிகளின் மீது இருக்கின்ற அளவு புகார்கள், பாஜகவின்மீது இல்லை.
மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோதுகூட மதவாத அரசியல் செய்கிறார் என்பது மாதிரியான குற்றச்சாட்டுகள்தான் இருந்தனவே தவிர ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை. 2014-ல் இருந்து எதிர்க்கட்சிகள் செய்த ஊழலைத்தான் ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வருகிறார்கள். ஒருவேளை இவர்கள் ஆட்சியை விட்டுப் இறங்கினால்தான் இவர்கள் ஊழல் செய்திருக்கிறார்களா, என்ன செய்தார்கள் என்பது வெளியில்வரும். ரஃபேல், 5 ஜி விவகாரங்களில்கூட என்ன நடந்தது என்பது அப்போதுதான் தெரியும். தேர்தல் பத்திரங்கள் மூலமாக இவர்களுக்கு எப்படி அதிகமாகப் பணம் வருகிறது என்பதும் விசாரிக்கப்படும்.
கடவுள், மதம், தேசபக்தி தவிர ஊழல் மற்றும் குடும்ப அரசியல் இரண்டையும் தங்கள் அரசியலுக்காகத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். மத்தியில், 2ஜி உள்ளிட்ட பல விஷயங்களை முன்வைத்து வெற்றிபெற்றார்கள். இப்போதும் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட விஷயத்தைப் பேசி அந்த நெருப்பை அணையவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரை, உ.பியில் மாயாவதியின் ஆட்சியை அப்படித்தான் அகற்றினார்கள். மேற்கு வங்கம், தெலங்கானா, கேரளா என பல மாநிலங்களிலும் அதற்கான பரப்புரைகளைச் செய்துவருகிறார்கள். தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள்மீது பாஜக முன்வைத்த ஊழல்வாதம் இதுவரை எடுபடவில்லை. ஆனால், இனி எதிர்காலத்தில் தங்களின் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அவர்.
ராதாகிருஷ்ணன் ;
“ஜனநாயகத்தின் தூண்களாக இருக்கும் அமைப்புகளை எல்லாம் கையகப்படுத்தி தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துவதுதான் மிகப்பெரிய ஊழல். உதாரணத்துக்கு சி.ஏ.ஜியை எடுத்துக்கொள்ளுங்கள் 2014 வரை எந்தளவுக்கு ஆர்வமாக வேலை செய்தார்களோ, அதில் பத்து சதவிகிதம்கூட இந்த ஆட்சி வந்தபிறகு வேலை செய்யவில்லை. விஜிலென்ஸ் கமிஷனும் அதே போக்கைத்தான் கடைபிடித்துக் கொண்டிருக்கிறது. மத்தியத் தகவல் ஆணையமும் அப்படித்தான் செயல்படுகிறது. இந்த அமைப்புகளில் எல்லாம் தங்களுக்கு ஆதரவானவர்களை நியமித்து தங்கள் இஷ்டத்துக்குச் செயல்பட்டு வருகிறார்கள். தவிர, எதிர்க்கட்சிகளின்மீது மட்டும் பாயும் அமலாக்கத்துறை. எனில் இதைவிட ஊழல் என்ன இருக்கமுடியும். அதேபோல, வாரிசு அரசியலை எடுத்துக்கொண்டால், ராகுல் காந்தியின்மீது அந்த முத்திரையைக் குத்துவார்கள். அப்படியிருந்தால், அவரோ, சோனியா காந்தியோதானே 2004, 2009-ல் பிரதமராகியிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லையே.
ஆனால் அதே நேரத்தில், உலகளவில் மிகப்பெரிய வருமானமிக்க அமைப்பான, பி.சி.சி.ஐயில் தன் மகனைத்தானே உட்கார வைத்திருக்கிறார் அமித் ஷா. அதேபோல, எடியூரப்பாவின் மகன் என்ன செய்துகொண்டிருக்கிறார்?.., தங்கள் உறவினர்களை வைத்துதான் தேசியக் கட்சிகள் கொடுக்கும் நெருக்கடிகளைச் சமாளிக்கமுடியும் என்கிற நிலைக்கு மாநிலக் கட்சிகள் தள்ளப்படுகின்றன. அப்படி, அரசியல் காரணங்களால்தான் சில கட்சிகள் தங்களின் வாரிசுகளைக் கொண்டுவருகிறார்கள். அதேவேளை, மோடி பேசியிருக்கும் ஊழல், குடும்ப அரசியல் இந்த இரண்டு விஷயங்களும் தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் நிச்சயமாக எடுபடும். மக்கள் மத்தியில் எடுபடும் விஷயங்களைத்தான் அவர் பேசவும் செய்வார்” என்கிறார் அவர்.