யாங்கூன்: ஊழல் வழக்குகளில் மியான்மர் முன்னாள் அரசு ஆலோசகர்ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. அரசின் ஆலோசகராக சூகி பொறுப்பு வகித்தார்.
எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, அலுவல் ரீதியான சட்டங்களை மீறியது, ஊழலில் ஈடுபட்டது என ஆங் சான் சூகி மீது 11 வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பான விசாரணை மியான்மர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கரோனா விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு கடந்த டிசம்பர் மாதம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் ஆங் சான் சூகிக்கு எதிரான சில ஊழல் வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று வந்தது. இதில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஊழல் வழக்குகளின் விசாரணை மூடப்பட்ட அறைக்குள் நடைபெற்றதாகவும், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள், ஆங் சான் சூகி வழக்கறிஞர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் சூகியின் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்று மொத்தம் 4 வழக்குகளில் அவருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்தை விலையை விடக்குறைவாக அரசு நிலத்தை பொதுமக்களுக்கு வாடகைக்கு விட்டது, அறக்கட்டளைக்கு கொடுத்த நிதியை பயன்படுத்தி வீடு கட்டிக் கொண்டது உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டிருந்தன.
4 வழக்குகளில் தலா 3 ஆண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 வழக்குகளில் பெற்ற தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நான்காவது வழக்கில் பெற்ற தண்டனையை அதைத் தொடர்ந்த காலத்தில் அவர் அனுபவிக்க வேண்டும்என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. இதைத் தொடர்ந்து அவர் கூடுதலாக 6 ஆண்டு சிறைத் தண்டனையை பெற்றுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை ஆங் சான் சூகி மறுத்துள்ளார். தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.