சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய கேரியரை துவங்கி தற்போது 47வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் உள்ளார்.
இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். ரசிகர்களும் இதை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இதனிடையே ரஜினியின் மகள்களும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்று, அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ சகோதரர்கள் படம்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். வில்லனாக தன்னுடைய பயணத்தை துவக்கினாலும் ஹீரோவாக இவரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து சூப்பர்ஸ்டாரானவர் தற்போது தலைவர் என்றே அவரது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

அதிரடி நாயகன் ரஜினி
சினிமாவில் தொடர்ந்து அதிரடி படங்களில் நடித்துள்ள ரஜினி, கேரக்டர் ரோல்களிலும் அசத்தியுள்ளார். இவருக்குள் ஒரு சிறப்பான நடிகர் உண்டு என்றும் அதை கே பாலசந்தர், மகேந்திரன் உள்ளிட்ட சில இயக்குநர்களே சிறப்பாக வெளிக் கொண்டு வந்தனர் என்றும் கோலிவுட்டில் கூறப்படுகிறது. அதற்கேற்ப முள்ளும் மலரும் உள்ளிட்ட படங்கள் இவரது கேரியரில் சிறப்பான படங்களாக காணப்படுகின்றன.

வில்லனாக துவங்கிய பயணம்
வில்லனாக தன்னுடைய பயணத்தை ஆரம்பத்தில் துவங்கிய இவர், படிப்படியாகவே தன்னுடைய கேரக்டரை சிறப்பாக்கிக் கொண்டார். பல அதிரடி படங்களை தன்னுடைய கேரியரில் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப இவர் கொடுத்துள்ளார். சென்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என அனைத்து தளங்களிலும் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

47 ஆண்டுகால கேரியர்
இதனிடையே தற்போது இவர் சினிமாவில் தன்னுடைய 47 ஆண்டு கொண்டாட்டத்தை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ரசிகர்கள் #47yearsofRajinism என்ற ஹேஷ்டேக்கை தொடர்ந்து ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர். ரஜினியின் மகள்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அப்பா தெய்வக்குழந்தை
தன்னுடைய அப்பா ஒரு தெய்வக்குழந்தை என்று சவுந்தர்யாவும், கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு இது என்று ஐஸ்வர்யாவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனிடையே சவுந்தர்யா கூடுதலாக தன்னுடைய தந்தையும் தாயும் உள்ள அழகான போட்டோவை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

லவ்லி ஜில்லும்மா
அந்த புகைப்படத்தில் தன்னுடைய கணவருக்கு பெரிய பூங்கொத்தை லதா ரஜினிகாந்த் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த பதிவில் தங்களின் லவ்லி ஜில்லும்மா என்று லதா ரஜினிகாந்தை வாழ்த்தியுள்ளார். மேலும் அப்பாவின் மிகச்சிறந்த ரசிகை என்றும் தங்களது வீட்டின் சூப்பர்ஸ்டார் என்றும் பாராட்டியுள்ளார்.

துணையாக நின்ற லதா ரஜினிகாந்த்
ரஜினியின் இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்திற்கு துணையாக இருந்தவர் லதா ரஜினிகாந்த் என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு அவருடைய கேரியரில் அவர்மீது தொடர்ந்து கவனம் செலுத்தியவர் லதா ரஜினிகாந்த். சமீபத்தில் அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டபோது சிறப்பான கவனம் செலுத்தினார்.