விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்தநாள் மணிவிழாவில் தமிழக முதல்வர்
கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் “இன்றைக்கு போல 30ஆண்டுகளுக்கு முன்பு திருமாவும் நானும் நெருக்கமாக இருந்திருந்தால், அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன்.
கலைஞர் பலமுறை திருமாவிடம் திருமணம் செய்ய கூறினார்; கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும்தான்” என்று பேசியுள்ளார்.
ஆனால்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியையே திருமணம் செய்துகொண்டார்; கட்சி தொண்டர்கள்தான் அவருக்கு பிள்ளைகள்… ஆருயிர் சகோதரர் தொல் திருமாவளவனை பார்த்தால் 60 வயது ஆனவரை போலதெரியவில்லை. மேடையில் ஏறினால் 20 வயதுக்காரனை போல சிறுத்தையாக சீறுகிறார். புலியாக உறுமுகிறார். இவருக்கு 60 என்று சொல்ல முடியாத அளவுக்கு தான் திருமா தோற்றமளிக்கிறார் “என்றும் பேசியுள்ளார்.
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின் பாஜக-
உறவு குறித்தும் சில வார்த்தைகளை உதிர்த்துள்ளார். அவை “இந்த ஆட்சி இருப்பதே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் திராவிட கருத்தியல்களை நிறைவேற்றத்தான்; நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக இதை கூறுகிறேன்.
பாஜக உடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக செய்துகொள்ளாது; டெல்லிக்கு நான் செல்வது காவடி தூக்கவோ, கைகட்டி வாய் பொத்தி நிற்கவோ அல்ல; கலைஞர் பிள்ளை நான்.ஒன்றிய அரசு – மாநில அரசு உறவு மட்டுமே இங்கே உள்ளது; திமுகவுக்கும் பாஜகவும் எந்த உறவும் இல்லை “ என்று தனது வாழ்த்துரையில் ஸ்டாலின் பாஜக திமுக உறவு குறித்து பேசியுள்ளார்.
நாளை அரசு முறை பயணமாக டெல்லி செல்ல உள்ள நிலையில் ஸ்டாலின் இவ்வாறு பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.