விசிக தலைவர் திருமாவளவன் மணிவிழா பிறந்தநாளில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “நான் டெல்லிக்கு செல்வது காவடி தூக்கவோ, கை கட்டி, வாய் பொத்தி, உத்தரவு கேட்கவோ அல்ல. கலைஞர் பிள்ளை நான். ஒன்றிய அரசு என்ற உறவுதான் இருக்கிறதே தவிர திமுகவுக்கும் பாஜகவிற்கு எந்த உறவும் இல்லை” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனது 60வது பிறந்தநாளை மணிவிழா பிறந்தநாளாகக் கொண்டாடுகிறார். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கத்தில், 60வது மணிவிழா செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 16) நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.08.2022) விசிக தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் 60வது மணிவிழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “நம்முடைய ஆருயிர்ச் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களைப் பார்த்தால் அறுபது வயது ஆனவரைப் போலத் தெரியவில்லை. மேடையில் ஏறினால் இருபது வயதுக்காரரைப் போலத்தான் சிறுத்தையாகச் சீறுகிறார்! புலியாக உறுமுகிறார்! இவருக்கு அறுபது என்று சொல்லமுடியாத அளவுக்குத்தான் திருமா தோற்றமளிக்கிறார்.
இவருக்கு ஐம்பது வயதானபோது, 2012-ஆம் ஆண்டு பொன்விழா நடந்தது. அதில் நம்முடைய ஒப்பற்ற தலைவர் தமிழகத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பங்கேற்று வாழ்த்தியிருக்கிறார். இன்றைக்கு 60, நான் வாழ்த்த வந்திருக்கிறேன். அன்றைக்கு அப்பா வாழ்த்தினார், இன்றைக்கு பிள்ளை வாழ்த்த வந்திருக்கிறேன்.
தந்தை பெரியாராக இருந்தாலும், தலைவர் கலைஞர் அவர்களாக இருந்தாலும் சரி, 95 வயது வரை வாழ்ந்தார்கள். 95 வயது வரை வாழ்ந்தார்கள் என்றால், அவர்கள் அவர்களுக்காக வாழவில்லை, இந்த தமிழகத்துக்காக, தமிழ் மக்களுக்காக, தமிழ்நாட்டிற்காக வாழ்ந்திருக்கிறார்கள்.
அதைப் போலத்தான், நம்முடைய தொல்.திருமாவளவன் இந்தத் தமிழ்ச் சமூகத்துக்கு நீண்ட காலம் வாழ்வார், வாழ வேண்டும். தொல் பழங்குடிச் சமூகத்தின் மேன்மைக்காக, உரிமைக்காக அவர் நீண்ட காலம் வாழ வேண்டும்.
அவருக்கு இன்னும் ஏராளமான கடமையும், பொறுப்பும் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். நம்முடைய தொல். திருமா, சட்டக்கல்லூரி மாணவராக, மாணவர் தி.மு.க.வில் தொடக்க காலத்தில் இணைந்து பணியாற்றிய காலம் முதல் நான் ஓரளவு அவரைப்பற்றி அறிவேன். கல்லூரி மேடைகளிலும், கழக மாணவரணி மேடைகளிலும், துடிப்பான ஒரு காளையாக அன்று வலம் வந்தார். இப்போதும் வலம்வந்து கொண்டிருக்கிறார்.
அப்போது கழகத்துக்குள் இருந்து முழங்கி வந்தார். இப்போது கழகக் கூட்டணிக்குள் இருந்து முழங்கிக் கொண்டிருக்கிறார். எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் எங்களுக்கு உள்ளே இருப்பவரே தவிர, வெளியில் இருப்பவர் அல்ல நீங்கள்.
தலைவர் கலைஞர் அவர்களாக இருந்தாலும் சரி, நானாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும், தொல். திருமாவளவன் அவர்களைத் தோளோடு தோளாகச் சேர்த்து வைத்திருக்கவே நாங்கள் காத்திருக்கிறோம்.
எதற்காக என்றால், அவருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, அவரோடு இணைந்து செயல்படுவது என்பது தமிழகத்திற்கு வலிமை சேர்க்கக்கூடிய உரிய அடிப்படையில் அது வளரவேண்டும், வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.
‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’ என்று சொல்வதைப் போல, எங்களுக்கு பலமாக இருக்கக்கூடியவர்தான் நம்முடைய அருமை சகோதரர் தொல். திருமா. இதனை ஏதோ அரசியலுக்காக, தேர்தலுக்காக என்று யாரும் நினைத்துக்கொள்வதற்கு அவசியமே கிடையாது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இருப்பது தேர்தல் நட்பு மட்டுமல்ல, அரசியல் நட்பு மட்டுமல்ல. அது கொள்கை உறவு! இரண்டு கருத்தியல்களின் கூட்டணிதான், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இருக்கக்கூடிய நட்பு ஆகும்!
அதனால்தான், இதனை யாராலும் பிரிக்க முடியாது. தேர்தல் நட்பு என்றால் தேர்தலோடு முடிந்து போயிருக்கும். வெற்றிக்குப் பிறகும் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், ஒருதாய்ப் பிள்ளைகளாக இருக்கிறோம். நாம் ஒரே கொள்கையை இரண்டு இயக்கங்களின் மூலமாகச் செயல்படுத்த நினைத்துக் கொண்டிருப்பவர்கள். அதனால் நம்மை யாரும் பிரிக்க முடியாது.
”உங்களது திராவிட நாடு அமைந்தால், ஆதி திராவிடர்களாகிய இருக்கக்கூடிய எங்களுக்கு என்ன பயன்?” என்று தந்தை பெரியாரிடத்திலே ஒருவர் கேட்டிருக்கிறார். அப்போது தந்தை பெரியார் என்ன சொன்னார் என்றால், அதனால் நஷ்டம்தான் என்று பதில் சொல்லியிருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள்.
உங்களோடு ஒட்டிக் கொண்டுள்ள ஆதி என்ற வார்த்தை போய்விடும், நாம் அனைவரும் திராவிடர்களாக வாழ்வோம் என்று சொன்னதாகத் தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.
தமிழர்கள், நாகர்கள், திராவிடர்கள்தான், இந்த நாட்டின் பூர்வீகக்குடிகள் என்று சொன்னவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அத்தகைய உன்னதக் கருத்தியலின் பிரதிநிதிகள் நாம். அதனால்தான் நம்மை யாராலும் பிரிக்க முடியாது.
தேர்தல்கள் வரும், போகும். ஆனால், இயக்கங்கள் இருக்கும்! கொள்கைகள் இருக்கும்! கருத்தியல்கள் இருக்கும்! இலக்குகள் இருக்கும்!
இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு பத்திரிகையில் நம்முடைய அருமை சகோதரர் தொல்.திருமா அளித்த பேட்டியை நானும் பார்த்தேன். படித்தேன். அவரது கொள்கை உறுதியை அந்தப் பேட்டியின் மூலமாக நான் உணர்ந்தேன். ஏற்கனவே உணர்ந்ததுதான்.
நாங்கள் கொண்டு செலுத்தக்கூடிய ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கான இலக்கணம் என்ன என்பது குறித்து திருமா அவர்கள் ஒரு விளக்கத்தை மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறார். ”ஆரியத்துக்கு எதிரான அனைத்தும் திராவிடம்தான் என்று புரிந்து கொள்ளலாம்” என்று திருமா சொல்லி இருக்கிறார். இதைவிடச் சுருக்கமாக, சிறப்பாக யாராலும் சொல்ல முடியாது. இந்த ஆட்சியைப் பார்த்தால் பலருக்கு ஏன் கசக்கிறது என்றால், இதனால்தான். இதனைத்தான் அருமை சகோதரர் திருமா பொட்டில் அடித்தாற்போலச் சொல்லி இருக்கிறார்.
”பெரியாரை எதிர்க்கக் கூடிய சக்திகள் தி.மு.க.வையும் தொடர்ந்து எதிர்க்கிறார்கள்” என்றும் அந்தப் பேட்டியில் திருமா சொல்லி இருக்கிறார். நாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதால்தான் பெரியாரை எதிர்க்கக்கூடிய சக்திகள் இன்றைய தி.மு.க. அரசை எதிர்க்கிறார்கள். இதனையும் மிகச் சரியாக நம்முடைய திருமா குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்.
இணையத்தளத்திலே சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் எழுதி இருந்தார். எனக்கு அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது. தந்தை பெரியாரையும், கலைஞரையும் அவர்கள் எப்படி அழைப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் எழுதியதை அப்படியே சொல்கிறேன்.
”ஈ.வெ.ரா. பெயரை கருணாநிதிகூட ஒருநாளைக்கு இத்தனை தடவை சொல்லவில்லை, ஸ்டாலின்தான் தினமும் நிறைய தடவை சொல்லிக் கொண்டு இருக்கிறார்” என்று எழுதி இருக்கிறார் ஒருவர். அந்த முகம் தெரியாத நண்பருக்கு நான் சொல்வது என்னவென்று கேட்டீர்கள் என்றால், இந்த ஆட்சி இருப்பதே தந்தை பெரியாரின், பேரறிஞர் அண்ணாவின், முத்தமிழறிஞர் கலைஞரின் திராவிடக் கருத்தியல்களை நிறைவேற்றுவதற்காகத்தான் என்பதை இந்த விழாவின் மூலமாக நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக நான் குறிப்பிடுகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் 70 ஆண்டு காலத்திற்குப் பிறகு நின்று நிலைத்து நிற்பதற்கு என்ன காரணம்? இந்த அடிப்படைக் கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்பதால்தான். கோட்டையில் இருந்தாலும், அறிவாலயத்தில் இருந்தாலும் தி.மு.க.வின் கொள்கை ஒன்றுதான் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
அந்த பேட்டியில் நம்முடைய திருமா இங்கே கூட அதைத்தான் பேசினார். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அறிவுரையாகவும், திருமா ஒன்றை குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். அதைச் சொல்வதற்கு அவருக்கு எல்லா உரிமைகளும் உண்டு. அதை மனப்பூர்வமாக நான் ஏற்றுக் கொள்கிறேன்.
”பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளிடம் குறைந்தபட்ச சமரசத்தை தி.மு.க. கையாண்டால் கூட, தி.மு.க. அணியில் பா.ஜ.க. எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல நீர்த்துப் போய்விடும் என்று சகோதரர் திருமா அதில் சொல்லியிருக்கிறார். ஆனால், தி.மு.க.வைப் பொறுத்தவரை தனது கொள்கையில் எப்போதுமே உறுதியாக இருக்கும்.
சகோதரர் திருமா கூறுவது போல் “குறைந்தபட்ச” சமரசத்தைக் கூட தி.மு.க. செய்து கொள்ளாது. நான் இப்போது இரு பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறேன், திருமா அவர்களுக்குத் தெரியும், எல்லோருக்கும் தெரியும், உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும், ஒன்று கட்சித் தலைவர் பொறுப்பு, இன்னொன்று அனைவருக்குமான தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பு. உங்களால் உருவாக்கப்பட்டவன்தான் நான்; உங்களால் உட்கார்ந்திருக்கக்கூடியவன் நான்.
அதைத்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள் பேசுகிறபோது நேரமில்லாத காரணத்தால், சூசகமாக சுருக்கத்தோடு குறிப்பிட்டார், டெல்லிக்குச் செல்வதைப் பற்றி சொன்னார். காவடியா தூக்கப் போகிறேன். கை கட்டி, வாய் பொத்தி, உத்தரவு என்ன என்றா கேட்கப் போகிறேன்? கலைஞர் பிள்ளை நான். உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம், என்பதை மனதில் நினைத்துக் கொண்டிருப்பவன் நான்.
ஆகவே. தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில், ஒன்றிய அரசிடம் பேசி, தமிழகத்திற்கு, தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களைப் பெறவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.
ஆகவே ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையில் உறவு இருக்கிறதே தவிர, தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கும் அல்ல! தி.மு.க.வினுடைய கொள்கைக்கும், பா.ஜ.க.வினுடைய கொள்கைக்கும் எந்த உறவும் கிடையாது!
ஆகவே சகோதரர் திருமா கொஞ்சம் கூட, கிஞ்சிற்றும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை இந்த ஸ்டாலின் விட்டுக் கொடுக்கமாட்டான். சகோதரர் திருமா கூறுவதுபோல், குறைந்தபட்ச சமரசமும் செய்து கொள்ளமாட்டான் இந்த ஸ்டாலின், உங்கள் சகோதரன் நான் என்று உரிமையோடு இதை சொல்ல விரும்புகிறேன் நான்.
இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி என்று இந்த ஆட்சியை கூறுகிறோம். ஆகவே, இந்த திராவிட பேரியக்கத்தின் கொள்கை முழக்கம்தான் இது. அந்த முழக்கம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் என்று இந்த மேடையின் வாயிலாக நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
அய்யா ஆசிரியர் சொன்னாரே, தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் போட்டதும், பெண்களும் அர்ச்சகராக வழிவகை செய்ததும், இடஒதுக்கீடு என்ற சமூகநீதிக் கொள்கையில் உறுதியாக இருப்பதும், இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்தான் என்று சொல்வதும், திரும்ப, திரும்ப நாம் எடுத்துச் சொல்வதும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டதும் இதனால்தானே! இன்னும் பலவற்றை என்னால் எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியும். நேரம் இல்லை.
திராவிட முன்னேற்றக் கழக அரசு, திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் எந்த சமரசத்துக்கும் இடமளிக்காத அரசு என்பதற்கு இவைதான் சாட்சியங்கள்.
இதனால்தான், சனாதனவாதிகளால், வகுப்புவாதிகளால் இந்த அரசு அதிகப்படியான தாக்குதலுக்கு உள்ளாகிறது. குறிப்பாக நான் அதிகப்படியாக அவர்களால் விமர்சிக்கப்படக்கூடிய சூழலுக்கு வந்திருக்கிறேன். அவ்வளவுதானே தவிர வேறு அல்ல.
சகோதரர் திருமா அவர்களுடைய பிறந்தநாளையொட்டி உறுதிமொழியாக, ‘சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்துவோம்! சனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம்!’ – என்று உருவாக்கி இருக்கிறார்கள்.
“சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்துவோம்!”
“சனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம்!” – என்ற முழக்கத்தை நானும் உங்களோடு சேர்ந்து வழிமொழிகிறேன். “சமத்துவம் உயர்த்துவோம்! சனாதன சங்கத்துவம் வீழ்த்துவோம்!” என்ற முழக்கத்தை உருவாக்கி இருக்கிறார். இதனை நானும் வழிமொழிகிறேன். இதில் சங்கத்துவம் என்ற சொல் புதிய சொல்லாக அமைந்து இருக்கிறது. நாம் உருவாக்க நினைப்பது, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்… ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சங்ககாலத் தமிழகம்!
சங்ககாலத் தமிழகத்துக்கு எதிரானதுதான் சனாதன சக்திகளின் சங்கத்துவம்! அதனை நாம் ஒன்றிணைந்து வீழ்த்துவோம்! இதுதான் அவருடைய அறுபதாவது பிறந்தநாளில் நான் வழங்கக்கூடிய மிகப் பெரிய கொள்கைப் பரிசு!
பொதுவாகப் பிறந்தநாள் விழாக்களின்போது, பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்வார்கள். இன்றைக்கு இருப்பதைப் போல முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நானும் அவரும் மிக நெருக்கமாக பழகியிருந்தால், நானே ஒரு பெண்ணைப் பார்த்து அவருக்கு கல்யாணம் செய்து வைத்திருப்பேன். அது இயலாமல் போய்விட்டது. தலைவர் கலைஞர் சந்திக்க வருகிறபோதெல்லாம் கலைஞர் அவர்கள் பலமுறை சொல்லியிருக்கிறார், பக்கத்திலிருந்து கேட்டவன் நான். எப்படியாவது அவருக்குத் திருமணம் செய்து வைக்க கலைஞர் அவர்கள் முயற்சி செய்தார்.
திருமா எப்போது வந்தாலும், இந்த வேண்டுகோளை தலைவர் கலைஞர் எடுத்து வைப்பார்கள். தலையாட்டுவார். ஆனால், இதுவரைக்கும் நடக்கவில்லை. தலைவர் கலைஞர் சொல்லி, அதை கேட்காத ஒரு செயல் இருந்தது என்றால் இந்த செயலாகத்தான் இருக்கும் திருமாவைப் பொறுத்தவரையில்.
ஆனால், அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் திருமணம் செய்து கொண்டவர். இந்த அரங்கில் மட்டுமல்ல, பல ஊர்களில் இருக்கும் சிறுத்தைக்குட்டிகள்தான் அவரது பிள்ளைகள். அந்தப் பிள்ளைகளுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, உங்களுக்கு தாயும் தந்தையுமாக இருக்கும் திருமாவளவன் பத்திரமாக அவரை நீங்கள் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் உங்கள் அனைவரது கையில் இருக்கிறது.
திருமா அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறன்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”