ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஆப்பிள் தோட்டத்தில் மீண்டும் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் பண்டிட் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.
சிறப்பு அந்தஸ்து
அதன்பிறகு, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய அரசு கூறி வருகிறது. இதற்கிடையே 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால் காஷ்மீரில் நாட்டின் எந்த பகுதியில் உள்ளவர்கள் சொத்துக்களை வாங்கலாம், குடியேறலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு அம்மாநில அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
பயங்கரவாதிகள் தாக்குதல்
குறிப்பாக காஷ்மீரில் பணியாற்றும் வெளி மாநில நபர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் இந்த வெறிச்செயல் தொடர்வதால் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், அங்கிருந்து அச்சத்துடன் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட பந்திபோரா மாவட்டத்தில் சும்பல் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது அம்ரேஸ் என்ற தொழிலாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பண்டிட் சுட்டுக்கொலை
இத்தகைய அடுத்தடுத்த சம்பவங்கள் அங்கு வாழும் வெளி மாநில மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருபுறம் இருக்க பயங்கரவாதிகள் – பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஒருபக்கம் அடிக்கடி என்கவுண்டர் நடைபெற்று வருகிறது. இதனால், ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து ஒருவித பதற்றமே நிலவி வரும் நிலையில், இன்று காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காஷ்மீர் பண்டிட் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள்
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ”காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் உள்ள சோதிபோரா பகுதியில் உள்ள்ள ஆப்பிள் தோட்டத்தில் இருந்த அப்பாவி பொதுமக்கள் இருவரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கியால் சுடப்பட்ட இருவருமே காஷ்மீரில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பிட்ட இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தனர்.