புதுடெல்லி: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் தல் ஏரிக்கரை சாலையில் முதன்முறையாக தேசியக் கொடிகளுடன் நேற்று முன்தினம் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதையேற்று கடந்த 13-ம் தேதி நாடு முழுவதும் வீடுகளில் தேசிய கொடியேற்றப்பட்டது. பல்வேறு நகரங்களில்தேசிய கொடிகளுடன் பிரம்மாண்ட பேரணிகள் நடைபெற்றன.
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் மாலை பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. அந்த யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பேரணிக்கு தலைமை வகித்தார். ஸ்ரீநகரில் திரளான எண்ணிக்கையில் இந்திய தேசியக் கொடிகளுடன் முதன்முறையாக பேரணி நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் இளைஞர் பணி மற்றும் விளையாட்டு துறை சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இதில் வடக்கு காஷ்மீர் பகுதியின் பாரமுல்லா மாவட்டத்தின் மாணவி களும், பெண்களும் முக்கியப் பங்கு வகித்தனர். காவல் துறை, ராணுவம், அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர் களும் பேரணியில் பங்கேற்றனர்.
10,000 பேர் பேரணி
ஸ்ரீநகரின் பிரதான பகுதியானதல் ஏரிக்கரையின் சாலையிலுள்ள லலித் காட்டிலிருந்து பொட்டானிக்கல் கார்டன் வரையில்சுமார் ஒன்றரை கி.மீ தொலைவு வரை பெருந்திரளானோர் பேரணியாக சென்றனர். துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடி அசைத்து பேரணியை தொடங்கிவைத்து நடந்து சென்றார்.பேரணியின் இறுதியில் உரை யாற்றிய துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ‘‘காஷ்மீர் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது பெண்கள் உட்பட சுமார் 10,000 பேர் தேசியக் கொடிகள் ஏந்தியபடி பேரணியாக சென்றது செய்தியாகி உள்ளது. வரும் 2047-ம் ஆண்டில் பொற்காலம் கொண்ட ஜம்மு-காஷ்மீர் உருவாக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
தலைமை செயலாளர் டாக்டர்அருண் குமார் மெதா, ஸ்ரீநகர் மேயர் ஹுனைத் அஸீம் மாட்டு, காஷ்மீர் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் நீலோபர் கான், ஜம்மு-காஷ்மீரின் வக்பு வாரிய தலைவர் டாக்டர் தாராக்ஷான் அன்ரோபி மற்றும் மத்தியப் பாதுகாப்பு படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.