குஜராத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. தரமான இலவச கல்வி.. அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி!

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தரமான இலவசக்கல்வி அளிக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 2013- ஆம் ஆண்டு முதன் முதலாக ஆட்சி அமைத்தது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி.

டெல்லியில் அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியை தேசிய அளவில் விரிவுபடுத்த முனைப்பு காட்டி வருவதாக ஆம் ஆத்மி கட்சியினர் கூறிவருகின்றனர்.

குஜராத் பக்கம் திரும்பிய கவனம்

அந்த வகையில் கோவா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்டது. கோவா சட்டமன்ற தேர்தலில் 2 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மிக்கு அங்கு மாநில கட்சியாக அங்கீகாரமும் பெற்றது. பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி தற்போது குஜராத் பக்கம் தனது கவனத்தை திருப்பியிருக்கிறது. குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளார்.

 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை

3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை

அடிக்கடி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை அளித்து வருகிறார். கடந்த வாரம் குஜரத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மின்சார கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேலை வாய்ப்பு, வேலையில்லாதவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை போன்ற கவர்ச்சிகர திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்து இருந்தார்.

 தரமான இலவசக்கல்வி

தரமான இலவசக்கல்வி

இந்த நிலையில், இன்று குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் என்ற இடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அப்போது கெஜ்ரிவால் கூறுகையில், “குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தரமான இலவசக்கல்வி அளிக்கப்படும். குஜராத்தில் பிறந்த அனைவரும் தரமான இலவச கல்வியை பெறுவார்கள். மிகச்சிறந்த தரமான கல்வியை இலவசமாக வழங்குவோம். ஏற்கனவே உள்ள அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்படுத்தப்படும்.

 பணி பாதுகாப்பு கிடைக்க வழி

பணி பாதுகாப்பு கிடைக்க வழி

அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டணங்கள் தணிக்கை செய்யப்படும். தனியார் பள்ளிகள் கூடுதலாக வாங்கிய கட்டணங்களை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லியில் எனது நிர்வாகம் இதை செய்தது. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு பணி பாதுகாப்பு அவர்களுக்கு கிடைக்க வழி ஏற்படுத்தப்படும். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, கற்பிக்கும் பணி அல்லாத பிற பணிகள் கொடுக்கப்படாது என்பதை உறுதி செய்வோம்” என்றார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.