குறைகளுக்குத் தீர்வு காண தொகுதி வாரியாக பொறியாளர்கள்: மின்னகத்தை ஆய்வு செய்து ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மின்சாரம் தொடர்பான பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வு காண தொகுதி வாரியாக பொறியாளர்களை நியமிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, 10 லட்சமாவது நுகர்வோரான சுவாமிநாதன் உடன் மின்னகத்தில் இருந்து அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர் சேவை பற்றி கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களின் அழைப்புகளை ஏற்று, குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, “இம்மின்னகத்தில் நேற்றைய தேதி வரை 10,50,282 புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அவற்றுள் 10,41,872 புகார்களுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. மொத்தத்தில் 99% புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.

தமிழ்நாட்டு மக்களின் மின்துறை சார்ந்த குறைகளை தீர்ப்பதில் முழுமூச்சுடன் செயல்பட்டு, அன்றைய தினமே தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்னகத்திற்கு வரும் பொதுமக்களின் அழைப்புகளுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒப்புகை அளிப்பதோடு, குறைகள் தீர்வு காணப்பட்டவுடன் அதுகுறித்தும் பொதுமக்களிடம் அலைபேசி வாயிலாக உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தொகுதி வாரியாக செயற்பொறியாளர் ஒருவரும், அமைச்சர்களின் தொகுதிகளில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மேற்பார்வை பொறியாளர்களும் நியமிக்கப்பட்டு, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு பொதுமக்களின் தேவை மற்றும் குறைகளை கேட்டறிந்து உடனடியாக சரி செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று மின்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின் நிலையங்களையும், மின் மாற்றிகளின் செயல்பாட்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

அப்போது மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்னகத்தில் சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நேரடியாக மின்னகத்திற்கு வந்து ஆய்வு செய்வதாக முதல்வர் தெரிவித்தார். இதன்படி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு சென்று முதல்வர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.