முதல்வராக இருந்த போது அமைச்சரவையில் அவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் எஸ்.பி.வேலுமணியும், தங்கமணியும் தான். முக்கியமான பணிகளை அவர்கள் மூலமாகவே எடப்பாடி பழனிசாமி செய்வார். அவர்களைவிடவும் பழனிசாமிக்கு நெருக்கமானவராக அறியப்படுபவர் கூட்டுறவு இளங்கோவன்.
பழனிசாமியின் ஒவ்வொரு நிலையிலும் அவரோடு உடன் பயணிப்பவர். அவருக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்காதவர் என்கிறார்கள் சேலம் மாவட்ட அதிமுக வட்டாரத்தினர். அதனாலே நீண்டகாலமாக தன் வசம் வைத்திருந்த சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கூட்டுறவு இளங்கோவனிடம் கொடுத்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி இளங்கோவனின் வீடு, மகனின் கல்வி நிறுவனங்கள், நெருங்கிய நண்பர்கள், பினாமிகள் என மொத்தம் 36 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த சோதனையின் போது 41 கிலோ தங்க நகைகள், 280 கிலோ வெள்ளிபொருட்கள், ரூ.34.28 லட்சம் பணம், ரூ.70 கோடியில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் முதலீடு, வெளிநாட்டு பணம் ரூ.5.5 லட்சம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையில் ஹார்டு டிஸ்க்கும் எடுக்கப்பட்டது.
நீதிமன்ற அனுமதியுடன் அந்த ஹார்ட் டிஸ்கில் உள்ள விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதில் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இளங்கோவனிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் கூட்டுறவு இளங்கோவன் பெயர் அடிபடுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை, கொடநாடு விவகாரம் ஆகியவற்றில் இளங்கோவனை மடக்கினால் எடப்பாடி பழனிசாமிக்கும் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.