டெஹ்ரான்: ஈரான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நஸீர் கனானி நேற்று கூறியதாவது:
அமெரிக்காவில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (75) தாக்கப்பட்ட சம்பவத்தில் அவரையும், அவரது ஆதரவாளர்களையும் தவிர வேறு யாரும் பழி மற்றும் குற்றச்சாட்டுக்கு தகுதியானவர்கள் என்று நாங்கள் கருதவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் ஈரான் மீது குற்றச்சாட்டுகளை கூறும் உரிமை யாருக்கும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட சல்மான் ருஷ்டி மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அவரது கல்லீரல், கண்கள், கை நரம்புகளில் பலத்த காயம் ஏற்பட்டதாக ருஷ்டியின் உதவியாளர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஹாதி மடார் (24) குற்றத்தை ஒப்புக்கொள்ளாததால் சிறையில் அடைக்கப்பட்டார்.
சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்ற சல்மான் ருஷ்டி “சாத்தானின் வேதங்கள்” புத்தகத்தை எழுதியதையடுத்து அவருக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.