கருநாடக மாநிலம், ஷிவமோகாவில் சுதந்திர தினத்தன்று சாவர்க்கரின் பேனர் வைக்கப்படதைத் தொடர்ந்து, இன்னொரு பிரிவினர் திப்பு சுல்தான் பேனர் வைக்கவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கலவரம் வெடித்தது. அந்தக் கலவரத்தில், பிரேம் சிங் என்ற இளைஞர் ஒருவர் கத்திக் குத்துக்கு ஆளானார். அதையடுத்து அந்தப் பகுதியில் நிலைமை இன்னும் மோசமடைய… வரும் 18-ம் தேதிவரை போலீஸ் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தது.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், கைதுசெய்யப்பட்டவர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டம் 307 பிரிவின் கீழ் கொலை முயற்சி என வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, ஷிவமோகா மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ஏ.டி.ஜி.பி அலோக் குமார் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய அரக ஞானேந்திரா, “மதத்தின் அடிப்படையில் நாங்கள் எதையும் முடிவு செய்வதில்லை. மாநிலத்தில் அமைதி நிலவவேண்டும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்துவோம். மேலும் இது போன்ற நிகழ்வுகள் இனி இங்கு நடக்கக்கூடாது. அதுமட்டுமல்லாமல் எந்த நிலையிலும் சட்டத்தை யாரும் கையிலெடுக்கக்கூடாது. சாவர்க்கரின் போஸ்டர் ஓட்டுவதில் என்ன தவறு இருக்கிறது. அவரும் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியிருக்கிறார்” என்று கூறினார்.