சிறுவர் நலன்களில் ஜனாதிபதி அதீத கவனம்!

இலங்கையிலுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு தேசிய வழிகாட்டுதல் மற்றும் குறைந்தபட்ச நியமங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வழிகாட்ல்

மற்றும் குறைந்தபட்ச தரநிலைகளை அறிமுகப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை!

எதிர்கால சிறுவர்களுக்கான தரமான சேவைகளை வழங்குவதற்காக சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு, மாகாண மட்டத்தில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல் தொடர்பில் குறைபாடுகள் நிலவுவது குறித்தும் கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த தேசிய வழிகாட்டல்கள் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தத்  திட்டமிடப்பட்டுள்ளது. சிறுவர் பராமரிப்பு துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குறித்த துறைசார் நிபுணர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர் மேம்பாட்டு மையங்களுக்கான தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகளின் ஆரம்ப வரைவு தயாரிக்கும் பணி 2013 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது சர்வதேச அளவில் இருக்கும் குறைந்தபட்ச தரநிலைகளை ஆய்வு செய்து  ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன் பின்னர், பல கட்டங்களாக சிறுவர் மேம்பாடு, சட்டம், சுகாதாரம், சிறுவர் பாதுகாப்பு உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள், இத்துறையில் உள்ள வல்லுநர்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டு மையங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளன. சிறுவர் பராமரிப்பு தொடர்பான ஆறு முக்கிய அம்சங்கள் தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறுவர் மேம்பாட்டு மையங்களை நிறுவுதல் மற்றும் பதிவு செய்தல்,  சிறுவர் மேம்பாட்டு மையங்களின் பணியாளர்கள், நிறுவனமயமாக்கல் மற்றும் சிறுவர்களை மீண்டும் சமூக மயப்படுத்தல், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு தர நியமங்கள், சிறுவர் ஆரோக்கியம், நலன்புரி மற்றும் முறைப்பாடுகளைக் கையாளுதல், மையங்களை சோதனையிடல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றை இந்த தரநிலைகளின் அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-16

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.