மதுரை: தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் கவனம் பெறாததால் தண்ணீர் வந்தும் கடந்த 2 ஆண்டுகளாக மதுரை குட்லாடம்பட்டி அருவியை வனத் துறை பூட்டி வைத்துள்ளதால் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட சுற்றுலாப் பயணிகள், இந்த மினி குற்றலாத்தில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
குளிர்ந்த சாரல் காற்றுடன் அருவிகளில் குளித்தால் மனமும், உடலும் புத்துணர்ச்சி பெறும். ஆனால், அப்படி ஆண்டு முழுவதுமே தண்ணீர் கொட்டும் அருவிகள் தமிழகத்தில் இல்லை. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழைகளை சார்ந்தே அருவிகளில் தண்ணீர் வருகிறது. தமிழகத்தில் குற்றாலம் அருவி, திற்பரப்பு அருவி, கும்பகரை அருவி, அருளி அருவி, ஒகேனக்கல் அருவி, மற்றும் குட்லாடம்பட்டி அருவி போன்ற 10 குருவிகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. இதில், குற்றாலம் அருவில் மட்டும் சீசனை தாண்டி மேற்கு தொடர்ச்சி மலையிலே இலேசான மழை பெய்தாலே தண்ணீர் வருகிறது. மேலும், சீசன் நேரத்தில் கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
அதனாலே சுற்றுலாத் துறையும், தமிழக அரசும் இந்த அருவிக்கு முக்கியத்துவம் கொடுத்து பராமரிப்பதாலே குற்றாலம் அருவி முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. குற்றாலம் அருவி போல் மற்ற அருவிகளும் ஒவ்வொரு வகையில் சிறப்பும், தனித்துவமும் வாய்ந்தவைகளாகதான் உள்ளன. ஆனால், வனத்துறை கட்டுப்பாடுகளும், பராமரிப்பும் இல்லாததால் குற்றாலம் போல் மற்ற அருவிகள் சுற்றுலா முக்கியத்துவம் பெறாமல் உள்ளன.
அப்படி ஒரு பரிதாப அருவியாக மதுரை மாவட்டத்தில் உள்ள குட்லாடம்பட்டி அருவி உள்ளது. மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் குட்லாம்பட்டி கிராமத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இந்த அருவி உள்ளது. சிறுமலையில் மழை பெய்யும் காலங்களில் இந்த அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதுபோன்ற நேரங்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமான அளவில் இங்கு குளிகின்றனர்.
மலைக் குன்றில் இருந்து 87 அடி உயரத்திலிருந்து கொட்டும் இந்த அருவியில் குளிப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு குதூகலமாகவும், கொண்டாட்டமாகவும் உள்ளது. ஆண்டில் ஐந்து முதல் எட்டு மாதங்கள் வரை இந்த அருவில் தண்ணீர் வரத்து காணப்படுகிறது. குற்றாலம் போன்றே பிரபலமாக வேண்டிய இந்த அருவி வனத் துறை கட்டுப்பாடுகளால் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் கவனம் பெறாமலே கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது.
சிறுமலை மூலிகை குணம் கொண்ட காட்டு மரங்கள், செடிகளை கொண்டவை. அதனால், சிறுமலையில் இருந்து பாறைகளுக்கு இடையேயும், அடர்ந்த மரக்காடுகளுக்கு மத்தியிலும் உருண்டோடி வரும் இந்த அருவியில் கொட்டும் தண்ணீர் மூலிகை சக்தி கொண்டவையாக கருதப்படுகிறது.
வெப்பமண்டல பகுதியில் குளிர்ந்த சீதோஷனநிலையே காணப்படாத மதுரை மாவட்டத்தில் சிறுமலையின் அதிர்ஷ்டத்தால் இயற்கை எழில் சூழ்ந்த மலைகளின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அந்த அருவிதான் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட மக்களின் மினி குற்றாலமாக திழ்கிறது.
கடந்த 2018 -ஆம் ஆண்டு கஜா புயல் காரணமாக குட்லாடம்பட்டி அருவி பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. பாதுகாப்பு கருதி அப்போது மக்கள் குளிக்க தடைவிதித்தனர். அதன்பிறகு சீரமைத்து சுற்றுலாப்பயணிகளை அனுமதித்தனர். கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக மீண்டும் குளிக்க தடை விதித்தனர். அந்த தடை தற்போது வரை எடுக்கப்படவில்லை. அதனால், பார்க்கிங் உள்ளிட்ட சுற்றுலா வசதிகளை மேம்படுத்தி அருவியை மீண்டும் திறக்க வேண்டும் என்பதே சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.
புதுப்பித்து மீண்டும் அருவி திறக்கப்படும்
வனத்துறை ஊழியர்கள் சிலர் கூறுகையில், ”குட்லாடம்பட்டி அருவியில் தண்ணீர் விழும் இடத்தில் மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறையால் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் 2 லாரி ஜல்லி கற்கள் போட்டும் அந்த பள்ளம் நிரம்பவில்லை. அதனால், எத்தனை அடி ஆழத்திற்கு பள்ளம் உள்ளது என்பது தெரியவில்லை. இந்த நிலையில் அருவியில் சுற்றுலாப்பயணிகளை அனுமதித்தால் உயிர் பலி ஏற்படும். ஏற்கெனவே இந்த அருவில் 30-க்கும் மேற்பட்டோர் விழுந்து இறந்துள்ளனர்” என்றனர்.
மாவட்ட வனத்துறை அலுவலர் குருசாமி தபாலா கூறுகையில், ”குட்லாடம்பட்டி அருவி விழும் இடம் பழுதடைந்துள்ளது. மேலும், அருவிக்கு செல்லும் சாலையும் மோசமாக உள்ளது. அதனால், ரூ.10 லட்சத்திற்கு மேல் திட்ட மதிப்பீடு தயார் செய்து தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். நிதி ஒதுக்கீடு செய்ததும், பராமரித்து மீண்டும் அருவி மக்கள் குளிப்பதற்கு திறந்துவிடப்படும்” என்றார்.