புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், தமிழகத்தின் சார்பில், சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்றார். இக்கூட்டம் குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு: நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், பலப்படுத்துவதற்கும், விரிவு படுத்துவதற்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் இணைந்து செயல்பட்டு வருகிறது. மாவட்ட, மண்டல அளவில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற பாடத்தை கொரோனா காலம் கற்றுக் கொடுத்திருக்கிறது. அனைத்து மக்களுக்குமான சமமான சுகாதார சேவைகளை வழங்குவதற்கு மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் முழு ஒத்துழைப்பு வழங்கும். ஒன்றிய அரசால் ஒதுக்கப்படும் நிதியை குறைவான அளவு மட்டுமே மாநில அரசுகள் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது. எனவே, சுகாதாரத் திட்டங்களை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் விரைவாகச் செயல்படுத்தி, ஒன்றிய அரசு நிதியை விரைவாகப் பெற வேண்டும். மேலும், ஒன்றிய அரசால் ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பதையும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.