ராஜஸ்தானில் பட்டியலின மாணவர் ஆசிரியரின் பானையில் குடிநீர் பருகியதால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடக்காலம் ஆகிவிட்ட நிலையில் நாட்டில் இன்னும் தீண்டாமை கொடுமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் சுரனா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வாழ் என்ற பட்டியலின சிறுவன் படித்து வந்தான். 9 வயதான அந்த சிறுவன் பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்ததால் ஆசிரியர் அவனை கடுமையாக தாக்கியதால் சிறுவன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் சைல் சிங் மீது கொலை வழக்கு, தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். உயர் சாதியைச் சேர்ந்த ஆசிரியருக்காக பானை ஒதுக்கி வைக்கப்பட்டது சிறுவன் இந்திர குமாருக்குத் தெரியாது என்றும் ஆசிரியர் சைல் சிங் சிறுவனிடம், ‘நீ தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன். என் பானையில் இருந்து தண்ணீரைக் குடிக்க உனக்கு எவ்வளவு தைரியம்?’ என்று கூறிவிட்டு தாக்கியதாகவும் எஃப்ஐஆர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்திருக்கும் அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட், உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல்செய்ய காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். மேலும் அவர் இந்திர குமார் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் அரசு நிவாரண உதவி அளித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் சுரானா கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் இணையதள சேவைகளை ரத்து செய்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுவனின் உயிரிழப்புக்கு ராஜஸ்தான் மாநில அட்ரு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பனாசந்த் மேக்வால் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து கூறிய அவர், சிறுவன் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். பட்டியலின சமூகத்தை சார்ந்த ஒன்பது வயது மாணவன் மரணம் என்னை மிகவும் பாதித்துள்ளது. நான் மிகுந்த வேதனையில் உள்ளேன். நான் எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன். பட்டியலின சமூகங்கள் தொடர்ந்து வன்கொடுமைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாகி வருகிறது. இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், “சாதிய வன்கொடுமை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். பட்டியலின சமுதாய மக்களுக்கு நாங்கள் அவர்களுடன் நிற்பதை உறுதியளிக்கிறோம். மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது, எதிர்காலத்திலும் அவ்வாறே செய்யும். இதுபோன்ற பிரச்சினையை நாம் அரசியலாக்கக் கூடாது” என்று கூறினார்.
சிறுவன் கொலை செய்யப்பட்டதை விமர்சித்துள்ள ராஜஸ்தான் மாநில பாஜக, சிறுவனின் மரணம் அவமானகரமானது என்றும் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ராஜஸ்தானில் பட்டியலின மக்களுக்கு நீதி வழங்கக் கோரி முதல்வரிடம் பேசுவார்களா என்றும் கேள்வியெழுப்பியுள்ளது.
ராஜஸ்தானில் பட்டியலின மாணவர் ஆசிரியரின் பானையில் குடிநீர் பருகியதால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: கர்நாடகா: நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM