சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 50 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில், மாநகராட்சிப் பள்ளிகளில் 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் பயின்று உயர் கல்வியில் சேர்ந்துள்ள 285 மாணவ, மாணவியர்களுக்கு 67.39 லட்சம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, ” மழை காலத்திற்குள்ளாக சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 70 – 80% நிறைவு பெறும். தற்போது வரை சராசரியாக 50% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை அம்மா உணவகம் மூலமாக செயல்படுத்த மாநகராட்சி கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கை ஆய்வில் உள்ளது. முதல்வர் என்ன உத்தரவு பிறப்பிக்கிறாரோ அதன்பேரில் திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.