விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் கட்சியின் சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் மணிவிழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது மேடையில் பேசிய ஸ்டாலின், “இந்த ஆட்சி இருப்பதே தந்தை பெரியாரின், பேரறிஞர் அண்ணாவின், முத்தமிழறிஞர் கலைஞரின் திராவிட கருத்தியல்களை நிறைவேற்றுவதற்காகத்தான். கோட்டையிலிருந்தாலும், அறிவாலயத்திலிருந்தாலும் தி.மு.க-வின் கொள்கை ஒன்றுதான் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்.
பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளுடன் குறைந்தபட்ச சமரசத்தை தி.மு.க கையாண்டால்கூட, தி.மு.க அணியில் பா.ஜ.க எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல நீர்த்துப் போய்விடும் என்று திருமா சொல்லியிருக்கிறார். ஆனால், தி.மு.க-வை பொறுத்தவரை தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருக்கும். திருமா சொல்வதைப் போல குறைந்தபட்ச சமரசத்தைக்கூட தி.மு.க செய்துகொள்ளாது” என்றார்.
டெல்லி பயணம் குறித்து மேடையில் பேசிய ஸ்டாலின், “காவடி தூக்குவதற்காகவா போறேன். கைகட்டி வாய்பொத்தி உத்தரவு என்ன என்று கேட்பதற்காகவா போறேன். கலைஞரின் பிள்ளை நான். உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக் குரல் கொடுப்போம் என்பதை மனதில் நிலைநிறுத்திக் கொண்டிருப்பவன் நான். ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையே உறவு இருக்கிறதே தவிர, தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் அல்ல… ஆகவே திருமா கொஞ்சம்கூட கவலைப்பட வேண்டாம். திருமாவின் 30-வது பிறந்தநாளுக்கு அப்பா கலைஞர் வந்திருந்தார்.
இன்று 60-வது பிறந்தநாளுக்கு மகன் நான் வந்திருக்கிறேன். திருமா அப்போது திராவிடர் கழகத்திலிருந்தார், இப்போது கழக கூட்டணியில் இருக்கிறார். திருமா, கலைஞரை சந்திக்கும்போதெல்லாம் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கலைஞர் கூறிக்கொண்டே இருப்பார். கலைஞர் சொல்லி அவர் கேட்காமல் போன ஒரே விஷயம் அதுதான். ஆனால், திருமா அவர் தொண்டர்களை மணந்திருக்கிறார்” என்று கூறினார்.