புதுடெல்லி: தனித்துவமான சவால்களை தீர்க்க சட்டப் பேரவை, நீதி, நிர்வாகத்துறை ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷனில் நேற்று நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டு பேசியதாவது:
இந்தியா எதிர்கொண்ட சவால்களை இதுவரை எந்த நாடும் எதிர்கொள்ளவில்லை. சட்டப்பேரவை, நீதி, நிர்வாகத் துறை ஆகியவை இந்த சவால்களை எதிர்கொண்டு சமாளிக்கலாம் என்று எளிதாகச் சொல்லிவிட்டு போய்விடலாம். ஆனால் அது அத்தனை எளிதல்ல.
அந்த பிரச்சினையை இப்படி தீர்த்து இருக்கலாம்… அப்படி செய்திருக்கலாம் என்று கருத்து சொல்வது எளிது. ஆனால் பிரச்சினையை உணராத வரை அவற்றை தீர்ப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாவிட்டால், இந்தநாட்டின் பிரச்சினையை நாம் ஒருபோதும் எதிர்கொண்டு தீர்க்கமுடியாது. நாம் ஒன்றுபட வேண்டும். இதில் மாற்று கருத்து கிடையாது.
வேறுபடும் பிரச்சினைகள்
ஒரு மாநிலத்தின் பல்வேறு அமைப்புகளாக நீதித் துறை, சட்டப் பேரவை, நிர்வாகத் துறை ஆகியவை உள்ளன. இவை எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை, பிரச்சினைகளை அந்த அமைப்புகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான் மாநிலத்துக்கு மாநிலம்வேறுபாடு உள்ள தனித்துவமானபிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு காண முடியும்.
நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் ஏன் இவ்வளவு வழக்குகள் தேங்கி இருக்கின்றன? வழக்குகளில் தீர்ப்பு வர ஏன் இவ்வளவு தாமதமாகிறது என்ற கேள்விகள் நாடாளுமன்றத்தில் நீண்டநாட்களாக எழுப்பப்பட்டு வருகின்றன.
உண்மையைச் சொன்னால் இதற்கு பதில் என்னிடம் இல்லை. ஏனென்றால் இந்த விஷயத்தில் நான் லட்சுமணன் கோட்டை கடைபிடித்து வருகிறேன். அந்த கோட்டை நான் எப்போதும் கடந்து செல்லமாட்டேன். இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசினார்.