பெரம்பலூர் மாவட்டத்தில் தனது கிராமத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மலேசியாவில் வசிக்கும் தொழில் அதிபர் ஒருவர் 13 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்துள்ளார். அரசுக்கு உதவியாக அள்ளிக்கொடுத்த நல்ல உள்ளம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு…
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட, பூலாம்பாடி, கடம்பூர், புதூர், அரசடிகாடு, மேலகுணங்குடி ஆகிய பகுதிகள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மிகவும் பின் தங்கிய பகுதிகளாக காட்சி அளிக்கின்றது.
பூலாம்பாடி பேரூராட்சியில் உள்ள 5 கிராமங்களை உள்ளடக்கிய, 15 வார்டுகளில், 10ஆயித்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் அங்கு சாலை வசதி,குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி ஆகிய அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை.
அதே போல் மலையடிவார பகுதியான அரசடிகாடு பகுதியில் போதிய சாலை வசதி இல்லாததால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை வாகனங்களில் ஏற்றிச்செல்லக்கூட இயலாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அங்குள்ள மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் சிரமத்தை சந்தித்து வந்த நிலையில், இந்த ஊரில் பிறந்து மலேசியாவில் தொழிலதிபராக விளங்கும் டத்தோ பிரகதீஸ்குமார் என்பவர் ஊருக்கு திரும்பிய நிலையில் தன்னை வளர்த்த ஊர் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றி பின் தங்கி இருப்பதை கண்டார்.
சிவாஜி பட ரஜினி போல நிஜத்தில் பொதுமக்களின் சிரமங்களை போக்க தனி ஒருவனாக களமிறங்கினார் தொழில் அதிபர் பிரகதீஸ்குமார்.
அரசு அதிகாரிகளை சந்தித்த அவர் பூலாம்பாடி பேரூராட்சியில் அனைத்து வீதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரச்சொல்லி கோரிக்கை விடுத்ததோடு, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்மடுத்த எவ்வளவு நிதி தேவைப்படும்? என்று கண்டறிய சொன்னதோடு, அதற்கான தொகையை தானே செலவிடுவதாகவும் தெரிவித்தார்.
அதிகாரிகளின் ஆய்வின் முடிவில் பூலாம்பாடி பேரூராட்சி அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெதுவதற்காக, பொதுமக்களின் பங்களிப்பு தொகையுடன், நமக்குநாமே திட்டத்தின் கீழ் மொத்தம் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
தான் பிறந்த மண்ணின் மக்களுக்காக டத்தோ பிரகதீஸ்குமார் தனது ப்ளஸ் மேக்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேசன் சார்பில் 13 கோடி ரூபாயை தனி ஒருவனின் பங்களிப்பு தொகையாக அள்ளிக் கொடுப்பதாக அறிவித்தார்.
இதன்மூலம் பூலாம்பாடி பேரூராட்சியில் சாலைவசதி, குடிநீர் வசதி, மின்விளக்குவசதி, கழிவுநீர் கால்வாய், உயர்மட்ட பாலம் அமைத்தல், குடிநீர் கிணறு அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
முதற்கட்டமாக தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ் குமார் தனது பங்களிப்பு தொகையாக 90 லட்ச ரூபாய்க்கான வரைவோலையை பேரூராட்சி செயல் அலுவலர் சிவராமனிடம் வழங்கினார்.
இந்த நிகழ்வில் பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன், மலேசிய நாட்டு துணை தூதர் சரவணண், பூலாம்பாடி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சுதந்திர திரு நாளில் கிராமங்களின் முன்னேற்றம் குறித்து காந்திஜி கண்ட கனவை நனவாக்க சொந்தப்பணத்தை மக்கள் பணிகளுக்கு அள்ளிக் கொடுத்துள்ள வள்ளல் பிரகதீஸ்குமார் போன்றவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் .