”தம்பியாக கேட்கிறேன்.. இதனை தயங்காமல் செய்யுங்கள்”..ஸ்டாலினிடம் திருமாவளவன் வைத்த கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கலைவாணர் அரங்கில் மணிவிழா கொண்டாட்டம் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
image
இந்நிகழ்வில் பேசிய திருமாவளவன், “பெரியாரித்தை அண்ணா செழுமைப்படுத்தினார். கலைஞர் வலிமைப்படுத்தினார். நீங்கள் (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) அதை முழுமைப்படுத்த வேண்டும். உங்கள் தம்பியாகக் கேட்கிறேன். பெரியாரியத்தை முழுவீச்சில் கொண்டு செல்வதில் உங்களிடம் எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது.
image
திமுக என்ற கட்சி 7 ஆவது முறையாக ஆட்சியமைக்கக் காரணம் பெரியாரியம் தான். தற்போது மிகப் பெரிய ஆபத்து இந்தியாவை சூழ்ந்திருக்கிறது. இந்தியாவின் பெயரை மாற்றப் போகிறார்கள். தலைநகராக வாரணாசியை அறிவிக்கப் போகிறார்கள். சனாதன தர்மம் தான் இந்தியாவை ஆளப் போகிறதா?
image
தம்பியாக சொல்கிறேன். அண்ணன் ஸ்டாலின் நீங்கள் தேசிய தலைவராக மாற வேண்டும். நாடு முழுவதும் பயணிக்க வேண்டும். எங்கள் நம்பிக்கை நீங்கள்தான்” என்று பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய திராவிடர் கழக தலைவர் வீரமணி, “எங்கள் மொழி ஒரே மொழி, எங்கள் அணி ஒரே அணி. பலரை மதவெறி பிடித்திருக்கிறது. ஜாதி வெறிக்கு தமிழ் மண்ணில் இடமில்லை. காவிகள் ஆள் மாறி பட்டம் வாங்கலாமென முயற்சிக்கிறார்கள். இவர்களுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை. கேரளாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் பதில் சொன்னார். எங்கள் கூட்டணி கொள்கைக் கூட்டணி. அரசியல் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படலாம். கொள்கைக் கூட்டணிக்கு ஒருபோதும் பின்னடைவு இல்லை.
வெறும் விழா கொண்டாடிவிட்டு போய்விடக் கூடாது. சனாதன எதிர்ப்பு மாநாடு திருமாவளவன் நடத்தியதில் முக்கியமானது. ஒவ்வொரு கருத்தையும் மக்களிடம் கொண்டு செல்வதும், கொண்டு செல்ல வேண்டியதும் முக்கியமானது. சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவதும் , தோழமை சக்திகளை ஒருங்கிணைப்பதும் தான் இந்த விழாவின் நோக்கமாக திருமாவளவன் கொண்டிருக்கிறார்.
image
திராவிட மாடல் ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பதும், போர் வீரர்களாக எதிரிகளை புறமுதுகிட்டு ஓடச்செய்வதும் நம் வேலை. ஏதேதோ வேலை செய்து தமிழகத்தில் நுழையப்பார்க்கிறார்கள். எத்தனை விபீஷனர்கள், அனுமார்கள் வந்தாலும் இங்கே அவர்களின் வேலை நடக்காது. பெரிய பொறுப்பில் ஏதோ ஒரு கிருமி நுழைய இருப்பதாக வெளியான செய்தியை கேள்விப்பட்டு முடிவதற்குள்ளாகவே அந்த கிருமிக்கு மருந்தடித்து விட்டதாக செய்தி சொன்னார்கள். பதவி கொடுப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. நடப்பது நம் முதல்வர் ஆட்சி” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.