காபூல்:ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்து ஓர் ஆண்டு ஆன நிலையில், அந்நாட்டில் நோயும், பசியும், துயரும் மட்டுமே நிறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் ஆப்கனில் ஆட்சியைப் பிடித்த தலிபான்கள், இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். இந்நிலையில், தங்களது ஓராண்டு ஆட்சி நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் தலைநகர் காபூல் தெருக்களில் மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்தனர்.
அப்போது, ‘இஸ்லாம் வாழ்க; அமெரிக்காவுக்கு மரணம்’ போன்ற கோஷங்களை முழங்கினர். தலிபான்களை உலக நாடுகள் புறக்கணித்ததால் ஆப்கானிஸ்தானுக்கு கிடைத்து வந்த பொருளாதார உதவிகள் தடைப்பட்டன. இதனால், அடிப்படை வசதிகளின்றி அந்நாடு கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மேலும், பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைக்கு செல்வதில் கடும் கட்டுப்பாடுகளை விதித்ததால், ஒரு வருடத்திற்குப் பிறகும், சிறுமிகள், டீன் ஏஜ் பெண்கள் இன்னும் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.
மேலும், பெண்கள் பொது இடங்களில் தலை முதல் கால் வரை மூடி, தங்கள் கண்களை மட்டுமே காட்ட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளால் நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. அதே சமயம், அரசு வானொலி மற்றும் ‘டிவி’க்களில் ‘ஊழல் ஒழிப்பு, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் சாகுபடி போன்றவை தலிபான்களின் ஓராண்டு சாதனைகள்’ என தெரிவிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement