மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, கடந்த ஜூன் இறுதியில் இரண்டாக உடைந்தது. சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணி செயல்பட்டு வருகிறது. தற்போது இரண்டு அணிகளும் தங்களது பிரிவுதான் உண்மையான சிவசேனா என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். இப்பிரச்னை தேர்தல் கமிஷனுக்கு சென்று இருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள சிவசேனா அலுவலங்களை கைப்பற்றுவதில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மும்பை அருகே நடந்த நிகழ்ச்சியில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ. பிரகாஷ் சுர்வே கலந்து கொண்டு பேசினார். அதில், “உங்களுக்கு எதாவது பிரச்னை என்றால் தக்க பதிலடி கொடுங்கள். தாதாகிரித்தனத்தை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்களை அடியுங்கள். உங்களுக்காக நான் இருக்கிறேன். உங்களால் அவர்களின் கையை உடைக்க முடியவில்லை, எனில் காலை உடைத்துவிடுங்கள்.
உங்களை அடுத்த நாளே ஜாமீனில் எடுத்துவிடுகிறேன். கவலைப்படாதீர்கள். நாங்கள் யாருடனும் சண்டையிட மாட்டோம். ஆனால் யாராவது எங்களுடன் சண்டையிட்டால் நாங்கள் அவர்களை சும்மா விடமாட்டோம்” என்று தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரே ஆதரவாளர்களை குறி வைத்து பேசிய வீடியோ சமூக வலைத்தளத்திலும் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்தவர்கள் போலீஸில் புகார் செய்திருக்கின்றனர்.
ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.வான சந்தோஷ் பங்கர் என்பவர் ஹின்கோலி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு தரம் குறைந்த சாப்பாடு வழங்கப்பட்டதாக கேடரிங் மேலாளரை அடித்துள்ளார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. மற்றொரு புறம் ஏக்நாத் ஷிண்டே அணியிலும் விரிசல் விழ ஆரம்பித்திருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே அணியில் இருக்கும் சில எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி உத்தவ் தாக்கரேயை புகழ்ந்து பேசுகின்றனர். இதனால் அமைச்சரவை முழுமையாக விரிவுபடுத்தப்பட்ட பிறகு ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி எழுப்பலாம் என்று தெரிகிறது. தற்போது ஏக்நாத் ஷிண்டே அணியில் இருந்து 9 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் அமைச்சரவையை முழுமையாக விரிவு படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.