ஷிவமொக்கா: கர்நாடகாவின் ஷிவமொக்காவில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபருக்கு கத்தி குத்து, மற்றொருவருக்கு சரமாரி வெட்டு விழுந்தது. இதையொட்டி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா மாநிலம் ஷிவமொக்காவில் சுதந்திர தின விழா கொண்டாடுவதில் இரு தரப்பினர் இடையே மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றைய சுதந்திர தின விழாவின் போது, திப்பு சுல்தான் மற்றும் வீர் சாவர்க்கர் புகைப்படம் வைப்பதில் ஏற்பட்ட சர்ச்சையில் காந்தி பஜாரில் பிரேம் சிங் (29) என்ற வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், 10 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்து அமைப்பினர் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, கலவரம் நடப்பதால் காந்தி பஜாரில் கடை வைத்துள்ள பிரவீன் எண்ணுவத் என்பவர், கடையை மூடிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அவரை வழிமறித்த சிலர், மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் படுகாயமடைந்தார். காயமடைந்த 2 பேரும், மெகன் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஒருபுறம் திப்பு சுல்தான் மற்றும் சாவர்க்கர் புகைப்பட விவகாரத்தில் இரு தரப்பினர் இடையே பெரிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் ஷிவமொக்கா நகரில் பரபரப்பான சூழல் உருவாகி வருகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.