திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால், பக்தர்கள் குவிவார்கள் என்பதை எதிர்பார்த்து, முதியோர், குழந்தைகள், தாய்மார்கள், மாற்று திறனாளி பக்தர்கள் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை திருமலை யாத்திரையை தள்ளிப்போட வேண்டும் என்று தேவஸ்தானம் கோரிக்கை விடுத்தது.
ஆனால், பக்தர்கள் கடந்த வியாழக்கிழமை முதலே வரத் தொடங்கினர். இதனால், திருமலையில் தற்போது சுவாமி தரிசனம் செய்ய 36 மணி நேரம் ஆகிறது. கோகுலாஷ்டமி விடுமுறையால் பக்தர்கள் திருமலைக்கு வரு வார்கள் என்பதை அறிந்த தேவஸ்தானம், வரும் 21-ம் தேதி வரை விஐபி கடிதங்கள் ஏற்க மாட்டாது என்று அறிவித்தனர். நேரில் வரும் விஐபி.க்களுக்கு மட்டுமே தரிசன ஏற்பாடுகள் செய்ய இயலும் என்றும், இதனால் சாமானிய பக்தர்கள் பாதிக்கப்படுவர் என்றும் தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி.சுப்பா ரெட்டி அறிவித்தார்.
அந்த அறிவிப்பையும் மீறி, ஆந்திர மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் உஷா ஸ்ரீ சரண், தனது ஆதரவாளர்களுடன் நேற்றுமுன்தினம் திருமலைக்கு வந்தார். அனைவருக்கும் இரவு தங்கும் அறை வாங்கி கொடுத்த அமைச்சர், நேற்று காலை தன்னுடன் வந்த 60 பேரில் 50 பேருக்கு விஐபி பிரேக் தரிசனமும், 10 பேருக்கு சுப்ரபாத தரிசன டிக்கெட்டுகளையும் கொடுத்தாக வேண்டுமென அதிகாரிகளை வற்புறுத்தி டிக்கெட்டுகளை பெற்றார். பின்னர், அவர் நேற்று காலை தனது ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
இதுதொடர்பாக நேற்று காலை அமைச்சர் ஸ்ரீ சரணிடம், ‘‘21-ம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனம்ரத்து செய்யப்பட்ட பிறகும் எப்படி நீங்கள் உங்கள் ஆதரவாளர்களுக்கு விஐபி தரிசன டிக்கெட் வாங்கினீர்கள்?’’ என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, பதில் எதுவும் சொல்லாமல் அவர்களை தள்ளி விட்டு சென்று விட்டார் அமைச்சர் உஷா ஸ்ரீ சரண்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்து, வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 23 அறைகளும் நிரம்பி, கோயிலுக்கு வெளியே ஆஸ்தான மண்டபம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். அப்படி இருந்தும் அமைச்சருக்கு விஐபி பிரேக் தரிசனத்துக்கான 50 டிக்கெட் மற்றும் 10 சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளை எவ்வாறு வழங்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இது தற்போது பெரும் விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது.
ரத்த தானம் செய்தால் தரிசன அனுமதி
திருமலையில் உள்ள அஸ்வினி தேவஸ்தான மருத்துவமனையில் கண்காணிப்பாளர் டாக்டர் குசும்பு குமாரி நேற்று தேசிய கொடி ஏற்றிய பின் பேசுகையில், ‘‘ரத்ததானம் செய்யும் பக்தர்கள் திருமலையில் உள்ள சுபதம் நுழைவு வழியாக ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். இது ரத்த தானத்தை ஊக்குவிக்கும் திட்டமாகும். இதுபோன்று பெறப்படும் பலவகையான ரத்தம், திருப்பதியில் உள்ள தேவஸ்தான சிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.