
நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை
கடந்த 2016-17ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ.35.42 கோடி பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.
வருமானத்தை மறைத்ததற்கான ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019ம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 16க்கு தள்ளிவைத்துள்ளார்.