காந்தி நகர்: 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானோ என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமாகி ஆயுள் தண்டனை பெற்றவர்களை குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது.
பில்கிஸ் பானோ கூட்டுப் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று நிரூபணம் செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகளில் ஒருவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தல்படி, 11 பேரையும் விடுவிப்பது தொடர்பாக குஜராத் அரசு சார்பில் பாஜ்மஹால் நகர கலெக்டர் சுஜல் மைத்ரா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அதில் சுஜல் மைத்ரா கூறும்போது, “இவ்வழக்கில் 11 குற்றவாளிகளையும் விடுவிக்க ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இந்த பரிந்துரை மாநில அரசுக்கு அனுப்பப்பட்டு, நேற்று அவர்களை விடுவிப்பதற்கான உத்தரவு கிடைத்தது” என்றார்.
சுஜல் மைத்ரா தலைமையிலான இக்குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் 11 பேரையும் சுதந்திர தினமான நேற்று (திங்கட்கிழமை) குஜராத் அரசு விடுதலை செய்தது. பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் ஏற்கெனவே 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளனர்.
விமர்சனம்: அரசு இம்மாதிரியான கொடூரமான குற்றங்களை செய்தவர்களை விடுவிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் மீதான நம்பிக்கை குறையும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
என்ன நடந்தது? – 2002-ஆம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கரசேவகர்கள் 59 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக சிறும்பான்மையினர் தாக்குதலுக்கு உள்ளாகினர். தங்களது இருப்பிடத்திலிருந்து தப்பித்து வேறு இடங்களுக்குச் சென்றனர். இதில் 2002 , பிப்ரவரி 27-ல் பில்கிஸ் பானோ என்ற 5 மாத கர்ப்பிணியும் தனது குடும்பத்துடன் தனது கிராமத்திலிருந்து தப்பித்துச் சென்றார். பின்னர் சாலையில் ஷில்டர் அமைத்து தங்கிக் கொண்டிருந்த பில்கிஸ் பானோவின் குடும்பத்தை ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்கியது. இதில் பில்கிஸின் மகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். கர்ப்பிணியான பில்கிஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்தக் கொடூரக் குற்றத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றம், சிபிஐ-க்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 11 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் 11 பேரும் குற்றவாளிகள் என்று நிரூபணமானதைத் தொடர்ந்து 11 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், அவர்களை குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது.