நிதிஷ் குமார்.. தேஜஸ்வி ஷாக்; விடாமல் துரத்தும் கருப்பு!

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், பாஜக மேலிடம் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

இந்நிலையில் பாஜவுடன் கூட்டணியை முறிப்பதாக நிதீஷ் குமார் திடீரென அறிவித்தார். அப்போது அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியது தான் உறவை முறிப்பதற்கான காரணம் என நிதீஷ் குமார் அறிவித்தது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த சில மணி நேரங்களில் பாஜகவின் பரம எதிரி என்று பார்க்கப்படுகிற ஆர்ஜேடி கட்சியுடன், நிதீஷ் குமார் கூட்டணி அமைத்தார்.

இதன் தொடர்ச்சியாக நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆனதோடு, தேஜஸ்வி யாதவ்வுக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்தது, பாஜகவை ரொம்பவே கோபம் அடைய செய்துள்ளது.

பல ஆண்டுகளாக நட்பு பாராட்டிய தன்னிடமே வேலை காட்ட முயன்ற பாஜகவுக்கு நிதீஷ் குமார் பாடம் புகட்டி இருக்கும் நிலையில் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் இன்று, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் 11 பேர் அமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டனர். இதை அடுத்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் 16 பேர் அமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ், அலோக் மேத்தா, சுரேந்திர பிரசாத்யாதவ், ராமானந்த்யாதவ், குமார் சர்வஜீத் மற்றும் லலித் யாதவ் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் அஃபாக் ஆலம், முராரி லால் கௌதம் மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா சார்பில் சந்தோஷ் சுமன் ஆகியோர் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டனர்.

புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கான இலாகா குறித்த விபரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆளும் மகாகட்பந்தன் கூட்டணியில் உள்ள கட்சியின் எம்எல்ஏக்களுக்கு பாஜக வலை விரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஆட்சி கவிழும் அபாயம் உள்ளதாகவும், இதையறிந்து முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், பீகார் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.