சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், நீண்ட நாட்களுக்குப் பிறகு கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக விஜயகாந்த், நேற்று கட்சி அலுவலகம் வந்தார். அங்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா உதவியுடன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தொண்டர்களுக்கு பிரேமலதா இனிப்புகளை வழங்கினார்.
தொண்டர்கள் உற்சாகம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கட்சிஅலுவலகத்துக்கு வந்த விஜயகாந்தைப் பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். அலுவலக வாயிலில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ‘கேப்டன்.. கேப்டன்’ என்று கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஒருசிலர் விஜயகாந்த் உடல்நிலையைப் பார்த்து கண் கலங்கினர். தொண்டர்களைப் பார்த்து விஜயகாந்த் மகிழ்ச்சியுடன் கையசைத்தார்.