குண்டூர்: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி குண்டூரில் உள்ள தெலுங்கு தேசம் தலைமை அலுவலகத்தில் நேற்று தேசியக் கொடி எற்றி மரியாதை செலுத்தினார் சந்திரபாபு நாயுடு. அப்போது அவர் பேசியதாவது:
ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நம் நாட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. நம் மக்கள் ஏழ்மை, கொடுமைகளுக்கு இடையே பெரும் போராட்டம் செய்து சுதந்திரம் வாங்கிக்கொடுத்துள்ளனர். இதனை என்றும் நாம் மறக்க கூடாது. நேரு, நரசிம்ம ராவ், வாஜ்பாய் போன்றோர் நம் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டார்கள். தற்போதைய பிரதமர் மோடியும், அவர்களின் வழியில் நாட்டுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிறார்.
பிரதமர் தற்போது பலருக்கும் முன்னோடியாக திகழ்கிறார். நரசிம்ம ராவின் பல நிதி திட்டங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. இதேபோல், என்.டி. ராமாராவையும் நாம் மறந்து விடக் கூடாது. அவர் ஏழைகளுக்காகவும், தெலுங்கு இனத்தவருக்காகவும் கட்சியை தொடங்கி, அவர்களுக் காகவே கடைசிக் காலம் வரை உழைத்தார். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார். மோடியை புகழ்ந்து பேசியது மீண்டும் கூட்டணிக்கான வாய்ப்பாக கருதப்படுகிறது.