பெங்களூரு: பாஜக ஆட்சி எப்படி நடக்கிறது என்பது குறித்து ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரே பேசிய ஆடியோ அம்பலமாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநில சட்டத் துறை அமைச்சராக இருப்பவர் ஜேசி மதுசுவாமி. இவரும் சமூக ஆர்வலர் பாஸ்கர் என்பவரும் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று கசிந்துள்ளது. அவர்கள் உரையாடலில் கர்நாடகாவில் ஆளுங்கட்சி அமைச்சர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுவது பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒருகட்டத்தில் அமைச்சர் மதுசுவாமி, “கர்நாடக அரசு செயல்படவில்லை. கட்சி முழுக்க முழுக்க 2023 வரை ஆட்சியை தக்கவைக்கும் நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறது” என்று கூறுகிறார்.
மேலும், கூட்டுறவுத் துறை அமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக வேலை செய்வதில்லை என்றும் மதுசுவாமி குற்றஞ்சாட்டியிருக்கிறார். இந்த ஆடியோ அடங்கிய க்ளிப்பை கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.
இந்நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் எஸ்.டி.சோமசேகர், “தவறு செய்ததற்கான சாட்சிகள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். உரிய விசாரணை நடத்தாமல் நடவடிக்கை எடுக்க முடியாது. சட்ட அமைச்சர் சொல்வது போல் கர்நாடக அரசு ஒன்று தவழ்ந்து கொண்டிருக்கவில்லை. ஒருவேளை அவர் சார்ந்த துறையில் உள்ள குறைகளை சொன்னாரோ என்னவோ?” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
லஞ்சப் புகாரும் விமர்சனமும்: சட்ட அமைச்சர் மதுசுவாமியிடம் பேசும் சமூக ஆர்வலர் பாஸ்கர், “கூட்டுறவு வங்கி அதிகாரிகள் விவசாயிகள் கடனைப் புதுப்பிக்க லஞ்சம் கேட்கின்றனர். ரூ.50,000 கடனுக்கு ரூ.1,300 லஞ்சம் கேட்கின்றனர் என்று புலம்புகிறார். அதற்கு மதுசுவாமி, “வட்டிக்கான பணமெல்லாம் யாரோ கையாடல் செய்கின்றனர். பின்னர் கூட்டுறவு வங்கிகள் கூடுதல் பணம் கேட்கின்றன. இவை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே அமைச்சர் சோமசேகர் அமைதியாக இருக்கிறார்” என்று கூறுகிறார்.
“இங்கே ஆட்சி நடக்கவில்லை. 8 மாதங்களுக்கு ஆட்சியைக் கடத்தினால் போதும், தேர்தல் வந்துவிடும் என்ற மனநிலையே நிலவுகிறது” என்று மதுசுவாமி கூறுகிறார்.
கர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை கடந்த ஆண்டு 2021 ஜூலையில்தான் பதவியேற்றார். இந்நிலையில் அமைச்சர் மதுசுவாமியின் பேச்சு பசவராஜ் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.